விஜய் ரிவ்யூ செய்யல; ரீல்ஸ் எடுத்தார்: ஸ்டாலின்
27 புரட்டாசி 2026 ஞாயிறு 15:48 | பார்வைகள் : 253
அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு ஏற்படுவதை சுட்டிக்காட்டி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தவெக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்னைகளில் மின்வெட்டும் ஒன்றாக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டதுடன், அண்மையில் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே, மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
இந்த சூழலில், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் மின்வெட்டு இடையூறு ஏற்பட்டுள்ளது. இன்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், அமைச்சர்கள் அருண் ராஜ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டன.
இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, தி.மு.க., தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், தவெக அரசை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல” எனக் குறிப்பிட்டுள்ளார்.



