90 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!!

90 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!!

27 புரட்டாசி 2026 ஞாயிறு 08:11 | பார்வைகள் : 1131


Île-de-France பகுதியில் இருந்து பெல்ஜியம் நாட்டுக்கு இடையிலான 3-MMC எனப்படும் செயற்கை போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை பிரெஞ்சு காவல்துறையினர் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 17 மற்றும் 21 வயதுடைய இருவர் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பரிஸ் 20ஆவது வட்டாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, Belleville பகுதியில் உள்ள நிலத்தடி அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 கிலோ 3-MMC போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தை மதிப்பு இரண்டு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில், பெல்ஜியத்திலிருந்து  போதைப்பொருள் கொண்டுவரப்பட்டு பரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குறைந்தது ஆறு இடங்களில் சேமிக்கப்பட்ட பின்னர் உள்ளூர் விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வலையமைப்பின் முக்கியத் தலைவராகக் கருதப்படும் நபர் உட்பட ஆறு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கில் எட்டு பேர் மீது குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து படிக்க