மதுராந்தகம், தாராபுரம்: த.வெ.க.வுக்கு கைகொடுக்குமா இடைத்தேர்தல்?

மதுராந்தகம், தாராபுரம்: த.வெ.க.வுக்கு கைகொடுக்குமா இடைத்தேர்தல்?

28 புரட்டாசி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 339


மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் முந்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் த.வெ.க.வுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்ற விவாதமும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

### கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் கடந்த 59 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2½ ஆண்டுகளே ஆன த.வெ.க., கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை பெற மேலும் 11 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது 107 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட உள்ளன.

### 5 முனைப்போட்டி

இரு தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மா.கம்யூ. சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இ.கம்யூ. சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

### த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?

வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் 27 வேட்பாளர்களும், தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எடைபோடும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 4 மாத கால த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை மதிப்பிட்டு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

### மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள்

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 797 பேர் பெண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 926 பேர் ஆண்கள், 65 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கும் தற்போதைய இடைத்தேர்தலுக்கும் இடையே 1,152 புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். இதில் 430 ஆண்களும், 722 பெண்களும் அடங்குவர்.

மொத்தத்தில், ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

### தாராபுரம் தொகுதி வாக்காளர்கள்

தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் பெண் வாக்காளர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் ஆண் வாக்காளர்கள், 8 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 663 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தத் தொகுதியிலும் பெண்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக இரு தொகுதிகளிலும் பெண்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

### த.வெ.க.வுக்கு இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 451 வாக்காளர்கள் மற்றும் 480 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என மொத்தம் 931 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். இதேபோல், தாராபுரம் தொகுதியில் 1,201 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.

இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு முக்கியமானதாக உள்ளது. அதேவேளையில், எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் தங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும் என கருதுகின்றன. மேலும், த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றும் நம்புகின்றன.

### பெண்களின் வாக்குகள் முக்கியம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பெண்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில், அவர்களிடம் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டது.

அப்போது பெரும்பாலானோர் த.வெ.க.வுக்குத்தான் வாக்களிப்போம் என நம்பிக்கையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறப்படுகிறதே?” என்று கேட்டபோது, “கடந்த ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியை விட த.வெ.க. ஆட்சி சற்று பரவாயில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், பெண்களின் வாக்குகள் த.வெ.க.வுக்கு அதிகமாக கிடைக்கலாம் என தெரிகிறது.

### ஆண்களின் வாக்குகள் பிரியும் நிலை

அதே நேரத்தில், ஆண்களின் வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. என பிரியும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, த.வெ.க. அரசு மீது அதிருப்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

“தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று, செய்வது ஒன்று” என்று அவர்கள் சலிப்புடன் தெரிவித்துள்ளனர்.

இரு தொகுதி வாக்காளர்களின் மனநிலை இவ்வாறு இருந்தாலும், தலைவர்களின் பிரசாரத்தை பொறுத்து இந்த நிலை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கியுள்ளார். த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய்யும் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

### போட்டி பலமாக இருக்கும்

தலைவர்களின் பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அது கட்சிகளின் வாக்கு சதவீதத்திலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மொத்தத்தில், பொதுத்தேர்தலைவிட இந்த இடைத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி ஆளுங்கட்சியான த.வெ.க.வின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது.
 

தொடர்ந்து படிக்க