அரசு முடிவுகளை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை
28 புரட்டாசி 2026 திங்கள் 06:29 | பார்வைகள் : 203
அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாக்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வது அவசியம் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு மற்றும் தற்போது சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆர்டிஐ விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் முதலில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனடியாக அது திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் சென்ற பின்னரே எடுக்கப்படுகிறதா? அல்லது முதல்வருக்கு தெரியாமலேயே அரசு நிர்வாகத்தில் இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர் அவற்றை திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மை இருப்பதையும், இதுபோன்ற முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசு கொள்கை முடிவை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான விளைவுகளையும், மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எனவே, தவெக அரசு அவசரமாக முடிவுகளை எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்ததும் அவற்றை திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் நடைமுறையில் அதிக கவனம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



