என் அனுபவம் தான் முதல்வர் விஜய்யின் வயது; சொல்கிறார் இபிஎஸ்
28 புரட்டாசி 2026 திங்கள் 07:19 | பார்வைகள் : 211
அ.தி.மு.க. படிப்படியாக த.வெ.க.வுக்கு வந்துவிடும் என்று முதல்வர் விஜய் கூறுவது கனவில்கூட நடக்காது என்றும், அ.தி.மு.க.தான் த.வெ.க.வை வீழ்த்தும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, கன்னிவாடியில் எடப்பாடி பழனிசாமி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“இந்த தேர்தல் எதற்காக நடைபெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதேபோல் 5 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ஒருவர் வெற்றி பெற்றார். அவர் குதிரை பேரத்தில் மாற்றுக் கட்சிக்கு விலைபோய், தற்போது அந்தக் கட்சி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
சுமார் 7,000 பேர் அவரது வெற்றிக்காக உழைத்தனர். ஆனால், வாக்களித்த மக்களையும், தனக்காக உழைத்தவர்களையும் அவர் உதாசீனப்படுத்திவிட்டார். உங்கள் வாக்கை விற்றுவிட்டார். அவரை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்.
### கனவில் கூட நடக்காது
அ.தி.மு.க. தி.மு.க.வின் கிளை என்று முதல்வர் விஜய் கூறுகிறார். நாங்கள் கிளை அல்ல; நீங்கள் தான் கிளை. கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்று ஓட்டுப்போட்டது யார்? நீங்கள் தான்.
த.வெ.க. முளைத்து மூன்று இலைகள்தான் விட்டிருக்கிறது. அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டம். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி; 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
விஜய் ஏன் காரில் செல்லாமல் சைக்கிளில் சென்றார்? சைக்கிளில் சென்றால்தான் மக்களுக்கு தெரியும் என்பதற்காகத்தான். எனவே, அவர் நம்மை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.
அ.தி.மு.க. கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது என்று விஜய் கூறுகிறார். இங்கு வந்து பாருங்கள், எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியும். நான் உங்களைப் போல திரைப்படத்தில் இருந்து வந்தவன் அல்ல; உழைப்பால் வந்தவன். என்னைவிட அதிகமாக உழைத்தவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள்.
1974-ம் ஆண்டு கட்சியில் இணைந்து, 52 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். த.வெ.க. தலைவருக்கே 52 வயதுதான். அவர் நம்மை விமர்சிக்கிறார்.
மேலும், அ.தி.மு.க. படிப்படியாக த.வெ.க.வுக்கு வந்துவிடும் என்கிறார். அது கனவில் கூட நடக்காது. அ.தி.மு.க.தான் த.வெ.க.வை வீழ்த்தும்.
### ஆதரிப்பவர்களே எதிர்ப்பு
இரண்டு நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்கிறார். அவரும் ஓடிப்போனவர். அவரை வல்லவர், நல்லவர் என விஜய் கூறுகிறார். இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?
ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து, தனது கட்சியில் இணைத்து, அவருக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார் என்றால், அவரது யோக்கியதை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இதுதான் தூய கட்சியா? இது தீய கட்சி. நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற்றால் பாராட்டலாம். ஆனால், ஆட்சியை காப்பாற்றுவதற்காக வெட்கக்கேடான செயலை செய்திருக்கிறார்.
### காஸ்ட்லி முதல்வர்
நாங்கள் மட்டும் இதை கூறவில்லை. த.வெ.க. அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இதை கூறுகின்றன. அவர்கள் த.வெ.க.வை எதிர்த்துப் போட்டியிடவும் செய்கிறார்கள்.
மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆதரித்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பலமுறை எச்சரித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் எச்சரித்துவிட்டனர்.
தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? முதல்வர் லக்சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
விவசாயிக்கு காலில் செருப்பு இல்லை, உணவு இல்லை. ஆனால், கடன் வாங்கி தலைமைச் செயலகம் கட்டப்போகிறார்களாம். முதல்வர் அறை போதவில்லை என்கிறார். அண்ணா முதல் ஸ்டாலின் வரை, நான் உட்பட அனைவரும் அதே இடத்தில் இருந்து பணியாற்றியுள்ளோம்.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் ரூ.10 கோடி செலவில் சொகுசு அறை கட்டப்பட்டு வருகிறது. 40 ஆயிரம் சதுர அடியில் அது அமைக்கப்படுகிறது. கடல் காற்று வாங்குவதற்காக ஏழை மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டுமா?
மக்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். த.வெ.க. முதல்வர் காஸ்ட்லி முதல்வர். கோட்சூட் அணிந்து வருவார், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பார். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
இப்படிப்பட்ட முதல்வரை எங்குமே பார்த்ததில்லை. இவர் புதுமையான முதல்வர்.
### டாக்டர் பட்டம்
மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை. அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களிலேயே மின்சாரம் தடைபடுகிறது. அப்படியானால் நிர்வாகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதை பாருங்கள்.
இதை மின்வெட்டு என்று கூறாமல் மின்பற்றாக்குறை என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். அவருக்கு டாக்டர் பட்டமே கொடுத்துவிடலாம். இந்த பிரச்னையை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்?
அனைத்து மாநிலங்களும் மின்சாரத்தை கொள்முதல் செய்துவிட்டன. தற்போது எங்கு விலைக்கு வாங்குவது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்க முடியாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.



