ரூ.12 லட்சம் கோடி ஊழல்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
28 புரட்டாசி 2026 திங்கள் 08:29 | பார்வைகள் : 232
குஜராத்தில் நாட்டின் முதல் எல்.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் முதல் எல்.என்.ஜி. ரயிலை அமித் ஷா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டங்களில் ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் பணிகள், ‘கவச்’ எனப்படும் ரயில் பாதுகாப்பு அமைப்பு, தானியங்கி சிக்னல் அமைப்பு மற்றும் மின்சார இன்ஜின் பராமரிப்பு பணிமனை ஆகியவை அடங்கும்.
### நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ரயில்வே துறையில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்கட்டமைப்பும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களுக்கான தனிப்பாதை, விரைவு ரயில் சேவை, நவீன ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 11,000 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் நான்கு பாதைகள் கொண்ட வழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ரயில்வேயில் 99.6 சதவீத மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 75 கி.மீ. என்ற அளவில் இருந்த ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள், 2023-24ம் ஆண்டில் 7,188 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்துக்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 2009-14ம் ஆண்டுகளில் ரூ.589 கோடியாக இருந்தது. இது 2026-27ம் ஆண்டில் ரூ.17,366 கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
### ரூ.12 லட்சம் கோடி ஊழல்
ரயில்வே திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக குஜராத்தின் ஆமதாபாத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துப் பேசினார்.
அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். ரூ.12 லட்சம் கோடி ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர, காங்கிரஸ் ஆட்சியில் வேறு எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, கடந்த 12 ஆண்டுகளில் ஒரு பைசா கூட ஊழல் நடைபெறவில்லை. அப்படியொரு குற்றச்சாட்டை யாராலும் முன்வைக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.



