பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி: மோடி எச்சரிக்கை
28 புரட்டாசி 2026 திங்கள் 11:44 | பார்வைகள் : 187
இந்தியாவுடன் மோதத் துணியும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி நிச்சயம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
**மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:**
பாலக்கோட் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்துார் வரை இந்தியா தெரிவிக்கும் முக்கிய செய்தி ஒன்றுதான். இந்தியாவுடன் மோதத் துணியும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி நிச்சயம் வழங்கப்படும். பயங்கரவாதத்தை உறுதியான பதிலடி நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வோம் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சாதனைகளில் ஒன்றான 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. நமது துணிச்சலான வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து சென்று, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்களை தாக்கிய விதம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் கொள்கைக்கு இந்தத் தாக்குதல் புதிய முன்னுதாரணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
**இரங்கல்**
இந்த ஆண்டு 9/11 பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிகளில், அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இந்தியர்களும் இருந்தனர்.
2014ல் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, நியூயார்க்கில் அந்த அப்பாவி குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்கா சென்றது நினைவில் உள்ளது. இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில், துயரத்தில் இருக்கும் அந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தேசியப் பொறுப்பாகும். இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உள்ளது. இந்திய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றிணைந்து வருகின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் இயக்கத்தின் மூலம் அவர்கள் பிரசாரங்களையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
**சூரியக் கோவில்**
இந்த ஆண்டை சோமநாதர் சுயமரியாதை விழா நிகழ்வுடன் தொடங்கினோம். கி.பி. 1026ல் கஜினி முகமது முதன்முறையாக சோமநாதர் ஆலயத்தை அழித்தான். சோமநாதர் ஆலயத்தை அழித்து பாரதத்தின் அடையாளத்தையே துடைத்தெறிய வந்தவர்களின் இருப்பே இன்று இல்லாமல் போய்விட்டது.
அதே நேரத்தில், சோமநாதர் ஆலயம் தனது முழுப் பெருமையுடன் பரந்த கடலோரத்தில் கம்பீரமாக நின்று, இந்தியாவின் அழியாத தன்மையை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.
கி.பி. 1026ல் கஜினி முகமதுவின் படையினரால் சோமநாதர் கோவில் அழிக்கப்பட்ட அதே ஆண்டில், குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற மொதேரா சூரியக் கோவிலும் இடிக்கப்பட்டது.
மொதேரா கோவில் அழிக்கப்பட்டு தற்போது 1,000 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சோமநாதர் கோவில் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலம் அவமதிக்கப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் தாக்குதல்களும் நடத்தப்பட்ட இத்தகைய மிகப்பெரிய படையெடுப்பு, எந்தவொரு சமூகத்தின் அல்லது நிர்வாகத்தின் மன உறுதியையும் எளிதில் குலைத்திருக்கக்கூடும்.
எனினும், முதலாம் பீமதேவன் கஜினி முகமதுவை எதிர்த்து நின்றதோடு மட்டுமல்லாமல், குறுகிய காலத்திலேயே மொதேரா சூரியக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பினார்.
கடந்த காலத்துடனான நமது தொடர்பு இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு, அந்தப் பிணைப்பை வலுப்படுத்த அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்படுபவர்களே முக்கியக் காரணம்.
அத்தகைய தனித்துவமான முயற்சி தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ள உள்ளூர் கல்லூரியின் தமிழ்த் துறையைச் சேர்ந்த செல்வராஜு இந்த முயற்சியை முன்னின்று நடத்தி வருகிறார்.
**பாராட்டு**
செல்வராஜு மேற்கொண்டு வரும் முயற்சிகள், மக்கள் பழமையான சிலைகள் மற்றும் கோவில்களைக் கண்டறிய உதவுகின்றன. இதன் மூலம் நமது பாரம்பரியத்துடன் தொடர்பு கொள்ளவும், அதனை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
வகுப்பறைப் பாடத்தின்போது மாணவர் ஒருவரிடமிருந்து சில பழங்காலச் சிற்பங்கள் குறித்து முதலில் தகவல் அறிந்த செல்வராஜு, அதுதொடர்பான கலந்துரையாடலுக்குப் பின்னர் கள ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டார்.
அந்த ஆய்வின்போது பல்வேறு இடங்களில் ஏராளமான சிற்பங்களையும் பழங்காலக் கோயில்களையும் அவர் கண்டறிந்தார். கடந்த காலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நமது பாரம்பரியத்தைப் பற்றி சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கும் இது ஒரு சுவாரஸ்யமான வழியாக அமைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



