ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி; இந்தியாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
28 புரட்டாசி 2026 திங்கள் 13:51 | பார்வைகள் : 4676
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு, 'வி4' அமைப்பில் உள்ள நான்கு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, ரஷ்யாவும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.,வின் 81வது பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள மத்திய ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான 'வி4' எனப்படும் விசெகிரேடு அமைப்பின் கூட்டமும் தனியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் துணை பிரதமர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு 'வி4' அமைப்பு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உரையாற்றினார். அப்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்தார். அதேவேளையில், மேற்கத்திய நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியை விரிவுபடுத்துவதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதை ரஷ்யா ஆதரிக்கிறது. நிரந்தர உறுப்பினர் பதவிக்கான பிரேசில் மற்றும் இந்தியாவின் வேட்புமனுக்களுக்கு ரஷ்யா ஆதரவளிக்கிறது.
இதேபோல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு போர்ச்சுகல் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.



