பள்ளிப் பாடங்களில் பாலின சமநிலை: சபாஷ் ஆந்திரா!
28 புரட்டாசி 2026 திங்கள் 14:12 | பார்வைகள் : 383
ஆந்திர மாநிலம் முழுவதும் பள்ளிப் பாடத்திட்டங்களில் பாலின சமநிலையை ஏற்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகளை செய்வது போன்ற தகவல்கள் நீக்கப்பட்டு, ஆண், பெண் இருவரும் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து செய்வது போன்ற வகையில் பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் ஜனசேனா கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.
மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பள்ளிப் பாடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு பாலின சமநிலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
**தொழில்நுட்பம்**
மேலும், கற்றல் முறையை கலந்துரையாடல் அடிப்படையில் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகளையும் ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாநில கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் கூறியதாவது:
முன்பு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்களால் மட்டுமே செய்யப்படுவது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
தற்போது பாலின பாகுபாடுகளை தவிர்க்கும் நோக்கில், ஆண்களும் பெண்களும் வீட்டு பணிச்சுமையை சமமாக பகிர்ந்து கொள்வது போன்ற வகையில் பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சிறு வயதில் இருந்தே பெண்கள் மீது மரியாதையை வளர்க்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமை 'பை இல்லா நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் குடும்பம் மற்றும் விவசாய பட்ஜெட்டை நிர்வகித்தல், களப்பயணங்கள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அறிமுகம் உள்ளிட்ட நடைமுறை சார்ந்த பாடங்கள் நடத்தப்படுகின்றன.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் அன்றைய தினம் மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.
வகுப்பறைக் கற்றலை தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் சுவாரசியமாக மாற்றும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
**சுறுசுறுப்பு**
இதன்படி, ஒவ்வொரு 45 நிமிட வகுப்பிற்குப் பிறகு, மாணவர்கள் கற்ற பாடத்தை சுருக்கமாக எடுத்துரைக்கும் 60 முதல் 90 வினாடிகள் கொண்ட காணொளியை பார்ப்பார்கள். தொடர்ந்து அவர்களிடம் நான்கு முதல் ஐந்து கேள்விகள் கேட்கப்படும்.
இதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக மின்னணு கருவி மூலம், அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். அதுதொடர்பான கலந்துரையாடலும் நடைபெறும்.
இந்த நடைமுறை மாணவர்களின் கற்றல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும். வெறுமனே கவனிக்கும் நிலையிலிருந்து, சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் கற்கும் நிலைக்கு மாணவர்களை மாற்றுவதே இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.



