Rachida Datiக்கு 4 ஆண்டுகள் சிறை - 2 ஆண்டுகள் வீட்டுக்காவல் கோரி அரசுத் தரப்பு வாதம்!!
28 புரட்டாசி 2026 திங்கள் 17:58 | பார்வைகள் : 2194
முன்னாள் கலாசார அமைச்சரும் பரிஸ் 7ஆவது வட்டார மேயருமான Rachida Datiக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு தேசிய நிதிக் குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் (PNF) கோரிக்கை விடுத்துள்ளது. இதில் இரண்டு ஆண்டுகள் மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட வீட்டுக்காவலாக அமைய வேண்டும் என்றும், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை மற்றும் அரசுப் பணிகளில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், 450,000 யூரோகள் அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Renault நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Carlos Ghosnக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 375,000 யூரோக்கள் அபராதமும் விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியுள்ளது. தற்போது லிபியா நாட்டில் தலைமறைவாக உள்ளதால், அவர் விசாரணையில் நேரடியாக ஆஜராகவில்லை. Rachida Dati மற்றும் Carlos Ghosn ஆகிய இருவரும் ஊழல் மற்றும் செல்வாக்கு வர்த்தகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
2009 ஒக்டோபர் மாதம் முதல் 2013 பெப்ரவரி மாதம் வரையான , ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Rachida Dati, Renault-Nissan கூட்டணிக்காக சட்டவிரோதமாகச் செல்வாக்குச் செலுத்தியதற்குப் பிரதிபலனாக 900,000 யூரோக்கள் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை Rachida Dati முற்றாக மறுத்துள்ளார். Renault-Nissan நிறுவனத்துக்காக சட்டத்தரணியாகப் பணியாற்றியதாகவும், அந்தப் பணி தனது தேர்தல் பதவியுடன் சட்டபூர்வமாக இணங்கியதாகவும் அவர் தரப்பு தெரிவிக்கிறது. அதேவேளை, அவருக்கு எதிரான தண்டனைக் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பரிஸ் 7ஆவது வட்டார மேயர் பதவியை இழப்பதுடன், மீண்டும் நீதித்துறையில் பணியாற்றுவதற்கும் தடைகள் ஏற்படலாம். வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



