அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பாடசாலைகள் முதல் மருத்துவமனைகள் வரை எதிர்பார்க்கப்படும் பாதிப்புகள்!!
28 புரட்டாசி 2026 திங்கள் 20:47 | பார்வைகள் : 2245
பொது சேவைத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பாக, அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் “point d'indice” தொடர்ந்து நான்காவது ஆண்டாக முடக்கப்படலாம் என்ற அச்சம் இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
பாடசாலைகளில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் ஆசிரியர்கள் பங்கேற்கும் அளவைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக, அரசு தொடக்கப் பாடசாலைகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்பும் ஆசிரியர்கள் குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பாகத் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். 25% அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தால், மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நகராட்சி மேற்கொள்ளும்.
போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, SNCF மற்றும் RATP ஆகியவை செவ்வாய்க்கிழமை சேவை “கிட்டத்தட்ட சாதாரணமாக” இருக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளன. அதனால், வேலைநிறுத்த அழைப்பு இருந்தாலும், தொடருந்து மற்றும் பரிஸ் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெரிய அளவிலான இடையூறு ஏற்படாது என அந்த நிறுவனங்கள் கணித்துள்ளன.
மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது சேவைத் துறைகளிலும் ஊழியர்களுக்கு வேலைநிறுத்த உரிமை உள்ளது. இருப்பினும், மருத்துவமனைகளில் குறைந்தபட்ச சேவை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்; தேவையான சந்தர்ப்பங்களில் சில ஊழியர்கள் பணியில் தொடருமாறு நிர்வாகத்தால் நியமிக்கப்படலாம். பொதுவாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வேலைநிறுத்த நாட்களுக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்.



