தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
29 புரட்டாசி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 219
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை, மதுரையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க., அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு, மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் த.வெ.க., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையம் முதல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடி விஜய் சென்றார். தொடர்ந்து, பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக ரோடு ஷோவாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றார்.
அங்கு திரண்டிருந்த மக்கள், வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் உள்ளிட்டோர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
**தாய்மாமன் தங்க மோதிரம்**
மதுரை அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரங்களை அணிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்குச் சென்ற விஜய், அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
**2 தொகுதிகளை தவிர்த்து**
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.
22.6.2026 முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.



