மத்திய பிரதேசத்தில் 600 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிக்க முயற்சி
29 புரட்டாசி 2026 செவ்வாய் 07:01 | பார்வைகள் : 802
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக, 600 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்ற அதிகாரிகள் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன் தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
**சிம் ராஸ்தா கும்பமேளா**
மத்தியப் பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2028ம் ஆண்டு உஜ்ஜைனில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் சிம் ராஸ்தா கும்பமேளா நடைபெற உள்ளது.
இதையொட்டி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
**ஷாஹி மசூதி**
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக உஜ்ஜைனில் உள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட 272 கட்டுமானங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 600 ஆண்டுகள் பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியும் அடங்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மசூதியை இடிக்காமல், அதற்கு எதிரே உள்ள கட்டடங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன், ஏராளமான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
**போராட்டம்**
இந்நிலையில், இன்று காலை மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது திரண்டிருந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
**கல்வீச்சு தாக்குதல்**
அப்போது எதிர்பாராத விதமாக போலீசார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தற்காப்புக்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், லேசான தடியடியும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் விரைவுப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் உஜ்ஜைன் நகரில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



