தொகுதியை காலியாக வைப்பது பொது நலனுக்கு எதிரானது: விஜய் தரப்பு

தொகுதியை காலியாக வைப்பது பொது நலனுக்கு எதிரானது: விஜய் தரப்பு

29 புரட்டாசி 2026 செவ்வாய் 09:07 | பார்வைகள் : 198


ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில், தேர்தல் வழக்கு முடியும் வரை தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது என முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., நிர்வாகியுமான கே.வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்க ஜூலை 10ம் தேதி வரை தடை விதித்தது. இதற்கிடையே, தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என தேர்தல் கமிஷனும் பதில் மனு தாக்கல் செய்தது.

இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல்வர் விஜய் தரப்பில், “திருச்சி கிழக்கு தொகுதியில் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற தி.மு.க., வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது. இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டிருந்தால் தான் இதுபோன்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க முடியும்.

இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல; தனிநபர் நலன் சார்ந்த வழக்கு. தேர்தல் வழக்கு முடியும் வரை ஒரு தொகுதியை காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது” என வாதிடப்பட்டது.

முதல்வர் விஜய் தரப்பின் வாதங்கள் நிறைவடையாததால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
 

தொடர்ந்து படிக்க