யுபிஐ புதிய கட்டணத்துக்கு தடை இல்லை: சுப்ரீம்கோர்ட்

யுபிஐ புதிய கட்டணத்துக்கு தடை இல்லை: சுப்ரீம்கோர்ட்

29 புரட்டாசி 2026 செவ்வாய் 10:10 | பார்வைகள் : 181


ரூ.2,000க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.), யு.பி.ஐ. மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ரூ.2,000க்கு மேல் பணம் பெறும் நிறுவனங்களிடம் 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். பரிவர்த்தனை தொகை ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும், அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஒரே கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும். அதேபோல், பங்குச்சந்தை வணிகத்துக்கான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அஞ்சன் தத்தா சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று (செப். 28), தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கடராமன், “இந்தக் கட்டண முறையில் பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வணிகர்களிடம் இருந்துதான் வசூலிக்கப்படும்” என தெரிவித்தார்.

புதிய கட்டண நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் சட்டம் சார்ந்ததைவிட தொழில்நுட்பம் சார்ந்தது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
 

தொடர்ந்து படிக்க