737 மேக்ஸ் விமானங்களில் கோளாறு: போயிங் எச்சரிக்கை
29 புரட்டாசி 2026 செவ்வாய் 11:11 | பார்வைகள் : 197
போயிங் நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்களில் ஏற்பட்டுள்ள புதிய மென்பொருள் கோளாறு குறித்து, விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விமான தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான போயிங், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த 2,400க்கும் மேற்பட்ட பி737 விமானங்கள் உலகின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அகாசா விமான நிறுவனங்களிடம் 100 விமானங்கள் உள்ளன.
இந்த நிலையில், சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. விமானம் தரையிறங்கும்போது ஏதேனும் காரணத்தால் முதல் முயற்சி கைவிடப்பட்டு, இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சிக்கும் சூழலில் இந்தக் கோளாறு ஏற்படுகிறது.
அத்தகைய சூழலில், விமானத்தின் தானியங்கி வழிசெலுத்தல் அம்சம் தற்காலிகமாக செயலிழக்க வாய்ப்புள்ளது. இதனால் விமானிகள் தானியங்கி உதவியின்றி விமானத்தை மேனுவலாக இயக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது விமானிகளின் பணிச்சுமையை அதிகரிக்கக்கூடும்.
நிரந்தர மென்பொருள் புதுப்பிப்பு வெளியாகும் வரை, இரண்டாவது முறை தரையிறங்கிய பிறகு விமானத்தின் சிஸ்டத்தை ரீசெட் செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண போயிங் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அகாசா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “போயிங் நிறுவனத்துடன் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். பாதுகாப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து வருகிறோம். எங்கள் விமான சேவைகள் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்கி வருகின்றன” என்றார்.



