முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வீ தி லீடர்ஸ் அண்ணாமலை வலை

முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வீ தி லீடர்ஸ் அண்ணாமலை வலை

29 புரட்டாசி 2026 செவ்வாய் 12:15 | பார்வைகள் : 1834


‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரிடம் அதன் தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 20.19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ‘வீ தி லீடர்ஸ்’ வட்டாரங்கள் கூறியதாவது:

அண்ணாமலை தமிழக பா.ஜ. தலைவராக இருந்தபோது, அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.வில் இணைத்தார். அவர்களில் சிலரைத் தவிர, பெரும்பாலானோருக்கு கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.

தற்போது அண்ணாமலை தனியாக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். இதையடுத்து, தன்னை நம்பி பா.ஜ.வில் இணைந்தவர்களிடம் மீண்டும் அவர் பேச்சு நடத்தி வருகிறார். பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத, ஊழல் புகார்கள் இல்லாத, ஓரளவு மக்கள் செல்வாக்கு கொண்ட அ.தி.மு.க., - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கொங்கு மண்டலத்தில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு வலுவாக உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் அமைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதால், அப்பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை அண்ணாமலை எதிர்பார்ப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தன்னை நம்பி அமைப்பில் இணைவோருக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் ‘வீ தி லீடர்ஸ்’ வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தொடர்ந்து படிக்க