அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களுக்கு பதவி; த.வெ.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
29 புரட்டாசி 2026 செவ்வாய் 13:18 | பார்வைகள் : 465
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்தவர்களுக்கு கட்சியில் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது, த.வெ.க. நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து த.வெ.க. மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது:
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலர் திருமலையின் பொறுப்பில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இரு தொகுதிகள் இருந்தன. தற்போது மடத்துக்குளம் தொகுதி, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கும், உடுமலைப்பேட்டை தொகுதி முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், திருமலை அதிகாரம் இல்லாத மாவட்ட செயலராக மாறியுள்ளார்.
அதேபோல், எம்.எல்.ஏ. சத்தியபாமாவின் திருப்பூர் வடக்கு தொகுதி முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடமும், த.வெ.க. அமைச்சர் ராஜ்குமாரின் கடலூர் தொகுதி முன்னாள் அமைச்சர் சம்பத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை இனிமேல் அவர்களே கவனித்துக் கொள்வார்கள்” என கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்கியதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தொகுதிகளையும் அவர்களிடம் ஒப்படைப்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்து த.வெ.க. சார்பில் எம்.எல்.ஏ. ஆன 27 பேருக்கும் அந்தந்த தொகுதிகள் கட்சி தலைமையால் வழங்கப்பட்டன.
இதன் காரணமாக, ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலர்கள் தங்களது பதவிகளை இழந்தனர். இந்த நிலையில், புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு தொடர்ந்து பதவிகள் வழங்கப்பட்டால், கட்சிக்காக உழைத்தவர்கள் எங்கு செல்வது என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து பொதுச்செயலர் ஆனந்திடம் கேட்டபோது, “பொறுமையாக இருங்கள்” என்று மட்டுமே தெரிவிப்பதாக த.வெ.க. நிர்வாகிகள் கூறினர்.
### பா.ம.க. ரகசிய உத்தரவு
மதுராந்தகம் தொகுதிக்கு வரும் அக். 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் வன்னிய சமுதாய வாக்குகள் அதிகமாக உள்ளதால், பா.ம.க.வின் ஆதரவை பெற த.வெ.க. தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்கள் பா.ம.க. தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, த.வெ.க. வேட்பாளருக்கு மறைமுக ஆதரவு அளிக்குமாறு பா.ம.க.வினருக்கு அக்கட்சி தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இடைத்தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையில் பா.ம.க.வுக்கு இடம் வழங்கப்படும் என்றும், சவுமியா அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.



