தமிழக எல்லையில் 3 கி.மீ. தொலைவில் மேகதாது அணை: சிவக்குமார்

தமிழக எல்லையில் 3 கி.மீ. தொலைவில் மேகதாது அணை: சிவக்குமார்

29 புரட்டாசி 2026 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 21565


கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேகதாது அணை விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக எல்லைக்கு மிக அருகில், சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவிலேயே மேகதாது அணை அமையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:

“கஸ்தூரிரங்கன் அறிக்கை மற்றும் வறட்சி நிலைமை தொடர்பாக அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். 200-க்கும் மேற்பட்ட வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும் நிலையில் உள்ளன. இது மிகவும் தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும்.

பிரதமர் ஏற்கனவே இது தொடர்பாக எச்சரித்திருந்தாலும், ஒரு அணையைத் தவிர மற்ற எந்த அணையும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதுடன், நாங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.

இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் தனியாக விவாதித்துள்ளோம். இதற்கான சிறப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன” என்றார்.

மேலும், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
 

தொடர்ந்து படிக்க