இன்று பொது வேலைநிறுத்தம் - RER தொடருந்து சேவைகள் பாதிப்பு; பரிஸில் பல மெட்ரோ நிலையங்கள் மூடல்!!
29 புரட்டாசி 2026 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 1733
பொதுத்துறை ஊழியர்கள் இன்று செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் Île-de-France பிராந்தியத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படவுள்ளன. 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், CGT உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நாடு முழுவதும் 91 மாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதுடன், பரிஸில் République சதுக்கத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிடையில், பரிஸில் பிற்பகல் நடைபெறவுள்ள பேரணியை முன்னிட்டு, காவல்துறை தலைமையகத்தின் கோரிக்கைக்கு அமைய நண்பகல் முதல் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்படவுள்ளன.
மெட்ரோ 1ஆம் வழித்தடத்தில் Reuilly-Diderot மற்றும் Bastille,
3ஆம் வழித்தடத்தில் Temple,
5ஆம் வழித்தடத்தில் Bréguet-Sabin மற்றும் Bastille ஆகிய நிலையங்கள் மூடப்படும்.
8ஆம் வழித்தடத்தில் Reuilly-Diderot, Filles du Calvaire, Saint-Sébastien-Froissart, Chemin Vert மற்றும் Bastille ஆகிய நிலையங்களிலும் பயணிகள் ஏறவோ இறங்கவோ முடியாது.
RATP நிறுவனம் மெட்ரோ மற்றும் RER சேவைகள் பொதுவாக இயங்கும் என அறிவித்திருந்தாலும், இந்த நிலைய மூடல்கள் பயணிகளுக்கு இடையூறாக அமையும். 2024 டிசம்பரில் நடைபெற்ற பொதுத்துறை ஊழியர்களின் போராட்டத்தைப் போலவே இந்தப் போராட்டமும் பரவலான பங்கேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி மீண்டும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



