வீட்டை வெப்பமாக்கும் அமைப்பை நிறுவ அரசு 9,800 யூரோக்கள் வரை உதவி!!

வீட்டை வெப்பமாக்கும் அமைப்பை நிறுவ அரசு 9,800 யூரோக்கள் வரை உதவி!!

29 புரட்டாசி 2026 செவ்வாய் 22:06 | பார்வைகள் : 1833


அரசு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டை வெப்பமாக்கும் அமைப்பை (pompe à chaleur) நிறுவுவதற்கு ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 55,000 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது. ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 9,800 யூரோ உதவி கிடைக்கும் என்றும், மொத்தமாக 540 மில்லியன் யூரோ ஒதுக்கப்படும் என்றும் எரிசக்தி துறை அமைச்சர் Maud Bregeon தெரிவித்துள்ளார். 

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், எரிவாயு அல்லது எண்ணெய் மூலம் இயங்கும் பழைய வெப்பமூட்டும் முறைகளிலிருந்து மின்சார அடிப்படையிலான வெப்பமாக்கும் அமைப்பை மாற்றுவதாகும். pompe à chaleur அமைப்பதற்கான ஆரம்பச் செலவு பல குடும்பங்களுக்கு முக்கியத் தடையாக இருப்பதால், அந்தச் செலவை இந்தத் திட்டம் குறைக்க முயல்கிறது. 

இந்த புதிய வசதி 2026 அக்டோபர் 1 முதல் கிடைக்கும். நிறுவுதல், நிதியுதவி மற்றும் பராமரிப்பு ஆகியவை ஒருங்கிணைந்த சேவையாக வழங்கப்படும். முதல் மூன்று ஆண்டுகளில், pompe à chaleur மற்றும் மின்சாரத்திற்கான மொத்தச் செலவு, அந்தக் குடும்பம் முன்பு எரிவாயு அல்லது எண்ணெய் மூலம் செலுத்திய வெப்பச் செலவை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று அரசு தெரிவிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வீட்டை வெப்பமாக்கும் செலவு பாதியாகக் குறையக்கூடும் என அமைச்சர் கூறியுள்ளார். 

மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் “Chèque énergie” எனப்படும் எரிசக்தி உதவித் தொகையை வழக்கமான ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக ஜனவரி மாதத்திலேயே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உதவியின் தொகை 48 முதல் 277 யூரோக்கள் வரை இருக்கும்; சராசரியாக சுமார் 150 யூரோக்கள் கிடைக்கும் என்றும், சுமார் 4.5 மில்லியன் குடும்பங்கள் இதனை தானாகப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க