குழந்தைகள் உணவுப் பொட்டலங்களில் தாய், குழந்தை படம் கூடாது: துக்காராம்
30 புரட்டாசி 2026 புதன் 05:12 | பார்வைகள் : 469
குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலங்களில் தாய் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை இடம்பெறச் செய்யக்கூடாது என மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே, தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.
இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் தொடர்பான விதிகளை கடுமையாக்கி அவர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:
* பச்சிளம் குழந்தைகளுக்கான அனைத்து உணவுப் பொட்டலங்களிலும், “குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்தது” என்ற வாசகம் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும்.
* 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே இந்த தயாரிப்பை துணை உணவாக வழங்க வேண்டும் என்பதை உணவுப் பொட்டலங்களில் குறிப்பிட வேண்டும்.
* தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலுக்கு மாற்றுப் பொருட்கள் அல்லது குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விளம்பரம் செய்யவோ, சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் மூலம் விளம்பரப்படுத்தவோ கூடாது.
* குழந்தைகளுக்கான பால் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இலவச மாதிரிகள், பரிசுகள் அல்லது தள்ளுபடிகள் வழங்கக்கூடாது.
* குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலங்களில் தாய் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை இடம்பெறச் செய்யக்கூடாது.
இவ்வாறு துக்காராம் முண்டே உத்தரவிட்டுள்ளார்.
### தாய்ப்பால் சிறந்தது!
இதுகுறித்து துக்காராம் முண்டே கூறியதாவது:
“தாய்ப்பாலூட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் செய்திகள் இல்லாதது மிகப்பெரிய விதிமீறலாகும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
மகாராஷ்டிராவில் பிறந்த முதல் ஒரு மணி நேரம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புறங்களில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் 52.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 75.2 சதவீதமாகவும் உள்ளது.
10 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்காததே இதற்குக் காரணம்” என்றார்.



