மருந்து உற்பத்தி–விற்பனை விலையில் 10 மடங்கு வித்தியாசம்?: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

மருந்து உற்பத்தி–விற்பனை விலையில் 10 மடங்கு வித்தியாசம்?: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

30 புரட்டாசி 2026 புதன் 06:15 | பார்வைகள் : 176


புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தி விலைக்கும், அவற்றின் அதிகபட்ச சில்லரை விலைக்கும் இடையே 10 மடங்குக்கும் அதிகமான விலை வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

'எக்ஸ்ம்பிடியா 20 எம்ஜி' என்ற ஊசியின் உற்பத்தி விலை வெறும் ரூ.3,520 ஆக உள்ளது. ஆனால், அந்த மருந்தில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலை ரூ.22,437 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பகல் கொள்ளை போன்றது.

வழக்கமான மருந்தகங்களில் சிறிய அளவில் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், கார்ப்பரேட் மருத்துவமனைகள் முழு எம்.ஆர்.பி., விலையையே நிர்ணயித்து நோயாளிகளிடம் வசூலிக்கின்றன.

பணம் செலுத்தாத நிலையில் இறந்தவர்களின் உடல்களைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுக்கும் சூழல் உள்ளது. இத்தகைய நிலையில் சாமானிய மக்கள் ஏன் இந்த அளவுக்கு துன்பப்பட வேண்டும்.

அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கு மட்டுமே அரசு விலை வரம்பு நிர்ணயிக்கிறது. ஆனால், சந்தையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக விற்பனையாகும் 'நான்-ஷெடியூல்டு' எனப்படும் அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளுக்கு எந்தவித விலை கட்டுப்பாடும் இல்லை. அவற்றின் விலை ஆண்டுக்கு 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மக்கள் தங்களது வீடுகள் மற்றும் நகைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில்லரை விற்பனை விலைக்கு மேல் 16 சதவீத லாப வரம்பை மட்டுமே கொண்டு எம்.ஆர்.பி.,யை நிர்ணயிக்கும் வகையில் ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது என்பது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும்.

இதுதொடர்பாக விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை அக்., 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தொடர்ந்து படிக்க