வழக்குகள் முடிந்ததும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் உறுதி

வழக்குகள் முடிந்ததும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் உறுதி

30 புரட்டாசி 2026 புதன் 07:18 | பார்வைகள் : 371


உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு, திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாகக் கொண்டு, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

**அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் கூறப்பட்டதாவது:**

இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது நிரந்தரமான நடவடிக்கை அல்ல. உயர் நீதிமன்றம் தேர்தல் வழக்குகளை முடித்ததும், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதால், அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது. எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நவ., 24 வரை அவகாசம் இருப்பதால், சட்டப்படி முடிவு எடுக்க தேர்தல் கமிஷனை அனுமதிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், ஒரு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. அதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்கிறது.

தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அதே காலகட்டத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.

எனவே, தேர்தல் வழக்குகளில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்படும். இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்ற முதல்வர் விஜய் உள்ளிட்டோரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜய பாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தரப்பில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

அதேநேரத்தில், திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் கமிஷன் தரப்பு வாதத்தை கேட்பதற்காக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
 

தொடர்ந்து படிக்க