நீரவ் மோடி உதவியாளர் யுஏஇயில் இருந்து இந்தியா நாடு கடத்தல்

நீரவ் மோடி உதவியாளர் யுஏஇயில் இருந்து இந்தியா நாடு கடத்தல்

30 புரட்டாசி 2026 புதன் 08:21 | பார்வைகள் : 218


பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில், ஐக்கிய அரபு எமீரேட்சில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் உதவியாளர் சந்தீப் மிஸ்திரி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,357 கோடி மோசடி நடந்தது கடந்த 2018-ம் ஆண்டு அம்பலமானது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.

நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளரான சந்தீப் மிஸ்திரிக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஐக்கிய அரபு எமீரேட்சில் செயல்பட்ட போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் அவர் பணத்தை செலுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தீப் மிஸ்திரி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமீரேட்சில் பதுங்கியிருந்த சந்தீப் மிஸ்திரியை அந்நாட்டு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். தொடர்ந்து, இன்று அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மும்பைக்கு அழைத்து வரப்பட்ட அவரை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க, விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்ந்து படிக்க