பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தாமதம் கூடாது: அமித்ஷா
30 புரட்டாசி 2026 புதன் 10:28 | பார்வைகள் : 178
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைவாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக உருவாக்கப்பட்ட புதிய இணையதளத்தை, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்த புதிய இணையதளம் பெரிதும் உதவும்.
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் மாநில புலனாய்வு முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இது வழிவகுக்கும். வெளிநாட்டில் ஒரு குற்றவாளி கைது செய்யப்படும் போது, நீதிமன்ற அனுமதியைப் பெற்று அவசர ஒப்படைப்பு கோரிக்கைகளை அனுப்பும் நடவடிக்கைகளும் இதன் மூலம் எளிதாகும்.
கடந்த 2019 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும், உலகின் 36 வெவ்வேறு நாடுகளில் இருந்து தப்பியோடிய 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மத்திய அமைப்புகளுடன் இணைந்து நெருக்கமாக செயல்படும் வகையில் மாநில போலீசார் தனிக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவிதமான தாமதமும் ஏற்படக் கூடாது.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.



