மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம்! மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு?

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம்! மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு?

30 புரட்டாசி 2026 புதன் 11:33 | பார்வைகள் : 1716


மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அணை அமையவுள்ள இடத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அதிகாரிகளும் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராம்நகரில் உள்ள கனகபுரா தாலுகாவைச் சேர்ந்த மேகதாது பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.16,745 கோடி செலவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

**தமிழகம் எதிர்ப்பு**

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளையில், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கர்நாடக முதல்வர் சிவகுமார் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி உள்ளனர்.

முதல்வர் சிவகுமார் டில்லி செல்லும் ஒவ்வொரு முறையும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து, மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியிடமும் இதுதொடர்பாக சில முறை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கர்நாடகா தனது எல்லைக்குள் அணை கட்டுவதற்கு அண்டை மாநிலங்களிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார்.

**விரிவான அறிக்கை**

இந்த பதிலை சாதகமாக எடுத்துக்கொண்ட கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டில்லி சென்ற முதல்வர் சிவகுமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து, கர்நாடகாவில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“மேகதாது அணை அமையவுள்ள இடம் தமிழக எல்லையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது. அணை தொடர்பாக தமிழக அரசு கொண்டுள்ள அச்சம் தேவையற்றது. மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் குழு ஏற்கனவே அணை அமையவுள்ள இடத்துக்கு வந்து ஆய்வு செய்துள்ளது. அவர்களிடம் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.

பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இந்த அணை கட்டப்படுகிறது. அணை நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படாது என்பதை மத்திய குழு புரிந்து கொண்டுள்ளது. எங்களது நிலைப்பாட்டையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் புரிந்து கொண்டுள்ளார்.

மேகதாது அணை தொடர்பாக மேலும் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும். இதில் பங்கேற்குமாறு தமிழக முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அணை அமையவுள்ள இடத்தின் நிலப்பரப்பின் உண்மை நிலையை அறிந்து கொள்ள தமிழக அரசும் ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். தமிழக குழு வந்தால் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அணை திட்டத்தால் நீரில் மூழ்கும் வனப்பகுதிக்கு மாற்று இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய குழு ஆய்வு செய்ததாக சிவகுமார் தெரிவித்துள்ள போதிலும், அந்த ஆய்வு எப்போது நடைபெற்றது என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

**மேகதாது விவகாரத்தில் பிரதமரை சந்திக்க வேண்டும்: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை**

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு இதுவரை முறையாக வழங்கவில்லை. இதை மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.

மாறாக, அதிகளவில் மழை பெய்யும்போது உபரி நீரை திறந்துவிடும் வடிகாலாகவே தமிழகத்தை கர்நாடகா பயன்படுத்தி வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. எனவே, முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து, அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

**தமிழகத்தை வஞ்சிப்பதா?**

மேகதாது அணை அமையவுள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேகதாது அணை கட்டுமானத்துக்கு அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சிவகுமார் சந்தித்து பேசியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கர்நாடகத்துடன் இணைந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்கு த.வெ.க., அரசு துணை போகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் புதிய அணையையோ, நீர்த்தேக்கத்தையோ கட்ட முடியாது என்ற அரசியல் அமைப்புச் சட்ட விதியை முதல்வர் விஜய் அறிவாரா? கர்நாடக முதல்வரை பார்த்து அவர் பயப்படுகிறாரா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்ட தாய் மாமா என்ன செய்யப் போகிறார்?

**– பழனிசாமி,
அ.தி.மு.க., பொதுச்செயலர்**
 

தொடர்ந்து படிக்க