தெலுங்கானா முதல்-மந்திரி சர்ச்சை பேச்சு பா.ஜ.க. கடும் கண்டனம்
30 புரட்டாசி 2026 புதன் 12:35 | பார்வைகள் : 283
இந்து கடவுள்களான சிவன் மற்றும் ராமன் குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “சிவன் ஏழைகளின் கடவுள்; ராமன் பணக்காரர்களின் கடவுள். பா.ஜ.க., பணக்காரர்களின் கட்சி” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் திராவிடர்கள்; வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள். நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள்; அவர்கள் ராமனின் பக்தர்கள். பா.ஜ.க., ஸ்ரீராமரை திருடிவிட்டது. அது அவர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
**அரசியல் ரீதியான பிளவு**
ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடவுளை முன்னிறுத்தி நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே அரசியல் ரீதியான பிளவை ஏற்படுத்த ரேவந்த் ரெட்டி முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, பா.ஜ.க. அடிக்கடி “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுகிறது என்றும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஏன் “ஹர ஹர மகாதேவா” என உச்சரிப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
எனினும், பிரதமர் மோடிக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் உள்ள தொடர்பை பண்டி சஞ்சய் குமார் குறிப்பிட்டு பேசினார்.



