அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!!
30 புரட்டாசி 2026 புதன் 08:28 | பார்வைகள் : 5267
எரிபொருள் விலை உயர்வு, மருத்துவக் காப்பீட்டுத் திருப்பிச் செலுத்தும் தொகை, வீட்டு வசதிக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அக்டோபர் 1 முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் மற்றும் நிதி உதவித் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் குடும்பச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.
1. அதிகம் வாகனம் செலுத்துவோருக்கு 100 யூரோக்கள் எரிபொருள் உதவி
எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க, அதிக தூரம் வாகனம் செலுத்துவோருக்கு வழங்கப்படும் 100 யூரோக்கள் உதவித்தொகை அக்டோபர் 1 முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளது. வருமானம் மற்றும் பயணிக்கும் தூரம் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த உதவி வழங்கப்படும்.
2. எரிவாயு விலை 6.3 சதவீதத்தால் அதிகரிப்பு
எரிவாயுவின் குறிப்பு விலை 6.3 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. ஒரு மெகாவாட் மணிநேரத்துக்கான விலை செப்டம்பரில் 172.05 யூரோக்களாக இருந்த நிலையில், அக்டோபரில் 182.88 யூரோக்களாக உயர்கிறது.
3. மாதவிடாய் சாதனங்கள் மற்றும் உள்ளாடைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு
26 வயதுக்குட்பட்ட மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கும், Complémentaire santé solidaire (C2S) மருத்துவ உதவியைப் பெறுவோருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் சாதனங்கள் மற்றும் உள்ளாடைகளைக் கொள்வனவு செய்வதற்கு மருத்துவக் காப்பீட்டு உதவி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தகுதியுடைய இரண்டு பொருட்கள் வரை இந்த உதவியைப் பெறலாம்.
4. மருத்துவக் கட்டணங்களுக்கான வருடாந்த உச்சவரம்பு 140 யூரோக்களாக அதிகரிப்பு
மருத்துவச் சேவைகளுக்கான கட்டாயப் பங்களிப்புத் தொகையின் வருடாந்த உச்சவரம்பு 100 யூரோக்களிலிருந்து 140 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் காப்பீடு செய்தவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 10 யூரோக்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
5. நீண்டகால நோயாளிகளுக்குச் சில மருந்துகளுக்கான காப்பீட்டுத் தொகை குறைப்பு
நீண்டகால நோய்களுக்காக மருத்துவக் காப்பீட்டின் கீழ் 100 சதவீதச் செலவுத் திருப்பிச் செலுத்தலைப் பெற்று வந்த நோயாளிகள், குறைந்த மருத்துவப் பயனுடையதாக வகைப்படுத்தப்பட்ட சில மருந்துகளுக்கு இனி 15 சதவீதம் மட்டுமே திரும்பப் பெறுவார்கள். Spasfon, Météospasmyl, Gaviscon, Stilnox மற்றும் Théralène போன்ற மருந்துகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன.
6. Mon soutien psy திட்டத்தில் மூன்றாம் தரப்பு கட்டண முறை
2022ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள Mon soutien psy திட்டத்தின் கீழ் உளவியலாளர்களிடம் ஆலோசனை பெறுவோருக்கு மூன்றாம் தரப்பு கட்டண முறை பொதுவாக்கப்படுகிறது. இதுவரை மருத்துவக் காப்பீட்டின் மூலம் திரும்பப் பெறப்படும் தொகையின் ஒரு பகுதியை நோயாளிகள் முதலில் தங்களது பணத்திலிருந்து செலுத்த வேண்டியிருந்தது. புதிய நடைமுறையின்படி, தகுதியுடைய ஆலோசனைச் சேவைகளுக்கான அந்த முன்பணச் சுமை குறைக்கப்படும்.
7. தடுப்பு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள இனி பிசியோதெரபிஸ்டுகளுக்கும் அனுமதி
பிசியோதெரபிஸ்டுகள் எனப்படும் உடற்பயிற்சி மற்றும் உடலியக்கச் சிகிச்சை நிபுணர்களும் இனி Mon Bilan Prévention திட்டத்தின் கீழ் தடுப்பு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறும் இந்த ஆலோசனைகள் உணவுப் பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு, மனநலம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் தொடர்பான ஆபத்துகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
8. வீட்டு வசதிக்கான APL உதவித்தொகை அதிகரிப்பு
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் APL வீட்டு வசதி உதவித்தொகை 1.15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. வாடகை குறியீட்டின் வருடாந்த மாற்றத்தின் அடிப்படையில் இந்த உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பயனாளிகளுக்கு மாதாந்தம் சராசரியாக 2.52 யூரோ கூடுதலாகக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சராசரி மாதாந்த APL உதவித்தொகை 219 யூரோக்களிலிருந்து 221.52 யூரோக்களாக அதிகரிக்கவுள்ளது.
9. வீட்டு வாடகை ஒப்பந்தங்களில் புதிய கட்டாய விதிமுறை
வாடகை அல்லது கட்டணங்களைச் செலுத்தத் தவறினால், அல்லது பாதுகாப்பு வைப்புத்தொகையைச் செலுத்தாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கான விதி அதில் இடம்பெற வேண்டும். பணம் செலுத்துமாறு அனுப்பப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்குப் பின்னர் ஆறு வாரங்கள் கடந்தும் நிலுவைத் தொகை செலுத்தப்படாவிட்டால் மட்டுமே இந்த விதி நடைமுறைக்கு வரும். இருப்பினும், இந்த விதிமுறை அமலுக்கு வந்தாலும் வீட்டு உரிமையாளர்கள் தாங்களாகவே வாடகையாளர்களை வெளியேற்ற முடியாது.
10. வாகனங்களை இழுவை வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கான கட்டணம் அதிகரிப்பு
தவறாக நிறுத்தப்படும் வாகனங்களை இழுவை வாகனத்தின் மூலம் அகற்றுவதற்கான கட்டணம் அதிகரிக்கிறது. புதிய கட்டணத்தின்படி, வாகனத்தை அகற்றுவதற்கு 127.65 யூரோக்களுக்குப் பதிலாக 135 யூரோக்கள் செலுத்த வேண்டும். மேலும், வாகனத்தைப் பாதுகாப்பு நிலையத்தில் வைத்திருப்பதற்கான தினசரிக் கட்டணம் 6.75 யூரோக்களிலிருந்து 7.15 யூரோக்களாக உயர்கிறது. எனினும், தனியான கட்டண விதிமுறையைக் கொண்ட பரிஸ் நகரில் வாகனத்தை அகற்றுவதற்கான கட்டணம் 150 யூரோக்களாகவும், தினசரிப் பாதுகாப்புக் கட்டணம் 29 யூரோக்களாகவும் தொடர்ந்து இருக்கும்.



