திமுகவுக்கு அதிமுக முட்டுக் கொடுக்கிறது: முதல்வர் விஜய்
1 ஐப்பசி 2026 வியாழன் 07:43 | பார்வைகள் : 172
“சர்க்காரியா கமிஷன் குறித்து நான் பேசத் தொடங்கியதும் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதில் லாஜிக் இருக்கிறது. ஆனால், அதிமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அதிமுக ஏன் திமுகவுக்கு முட்டுக் கொடுக்கிறது?” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
பொதுச்செயலாளர் பேசிய பிறகு திமுக தலைவர் பேச வேண்டும். அவ்வாறு பேசும்போது மறதியில் உண்மையை வெளிப்படுத்திவிடுகிறார். கொளத்தூர் மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறுகிறார். அதேபோல், கையெழுத்திட்டு, கைகூப்பி, சத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சிரித்தபடி “கோடான கோடி நன்றி” என்று கூறுகிறார். அந்தக் குழந்தை நீங்கள்தான் என்பது போல அவர் கூறியிருக்கிறார்.
### ஒருமையில் விமர்சனம்
இது என்ன ஒரு திறமை பாருங்கள். படப்பிடிப்புக்குச் சென்று நடிப்பார்கள். மேடையில் தொடர்ந்து நடித்து பழகிவிட்டார்கள். அவ்வாறு நடித்து கூறியதன் அர்த்தம் என்ன தெரியுமா? திமுக ஆட்சியில் தவறு நடந்துள்ளது என்பதால்தான் கொளத்தூர் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதாகும். வரும் தேர்தலில் மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லை, அதற்கும் “கோடான கோடி நன்றி” என்று கூறிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இதற்கும் விஜய்தான் காரணம் என்று கூறிவிட்டு, தற்போது ஒருமையில் பேசுகிறார். “அவன், இவன்” என்று பேசுகிறார். நாம் அன்பாகவும் உறவாகவும் பேசினால் அது குற்றமா?
கட்சிக்காரர்களை விட்டு எப்படி பேசலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர்கள்தான் ஒருமையில் “அவன், இவன்” என்று பேசுகின்றனர். நீங்கள் பேசுங்கள் சார். பேசுங்கள். உங்கள் கட்சிக்காரர்கள், உங்களுக்குப் பிடித்த ஏஜென்ட்கள் மூலம் பேச வையுங்கள். பரம்பரை சொத்து, ஆபாச நிதி, வன்ம நிதி என வளர்த்து வைத்துள்ளீர்களே, அதை வைத்து பேச வையுங்கள். எவ்வளவு தரம் தாழ்ந்து பேசினாலும், மக்கள் நம்மை உயரத்தில் கொண்டு நிறுத்துவார்கள்.
எப்போதும் “மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்” என்று கூறுவீர்கள். இடைத்தேர்தலுக்குப் பிறகு அதுபோன்ற அறிக்கை ஒன்று வருகிறதா இல்லையா என்பதை மக்கள் பாருங்கள். இதைத்தான் 2026 பொதுக்குழுவிலும் நான் கூறினேன். நடந்ததா? மறந்திருந்தால் மீண்டும் போட்டுப் பாருங்கள்.
“மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்” என்று கூறுவார்கள். ஆனால், அந்தத் தீர்ப்பை மதிக்க மாட்டார்கள். அதை எப்படி தொந்தரவு செய்யலாம், எப்படி சதி செய்யலாம், யாருடன் கூட்டுச் சேரலாம் என திட்டமிடுவார்கள். யாருடன் கூட்டுச் சேரக்கூடாதோ அவர்களுடனேயே இணைந்து திட்டம் தீட்டுவார்கள்.
### இரண்டும் ஒன்று
அதிமுக முதலில் பாஜகவின் கிளையாக இருந்தது. தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது. அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே இவர்களும் செய்வார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்களோ அதையே பேசுவார்கள். அவர்கள் என்ன அறிக்கை வெளியிடுகிறார்களோ அதையே “காப்பி, பேஸ்ட்” செய்வார்கள். இருவரும் ஒன்றுதான். இருவருக்கும் ஓனர் ஒருவர்தான். என்ன சதி செய்தாலும் மக்களும், கடவுளும் இருக்கும்போது ஒன்றும் செய்ய முடியாது.
எம்ஜிஆர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினார்? ஜெயலலிதா யாரை எதிர்த்து அரசியல் செய்தார்? திமுகவை “தீயசக்தி” என்று எதிர்த்தனர். அந்த திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டால், அது எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் அவமானப்படுத்துவது போன்றதுதானே?
இன்று இருக்கும் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு அது வேதனையும் வலியும் தருகிறது. அந்தச் சதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால்தான் இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற சத்தியபாமா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக, அதைத் தாங்க முடியாமல் நம்முடன் வந்தார்.
### மக்கள் ஆதரவு
அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து கொண்டே கட்சி மாறவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் பக்கம் வந்தார். இதற்கு பேரம், அந்தப் பேரம், கழுதை, குதிரை என்று பலவாறு கூறுகின்றனர். மக்கள் நம் பக்கம் இருக்கும்போது எதற்காக இந்தப் பேரம் எல்லாம்?
மக்கள் அவதூறு பரப்புவதில்லை. திமுகவும் மற்ற சிலரும் இணைந்துதான் இந்த அவதூறுகளைப் பரப்புகின்றனர். திமுகவுக்கு மற்ற பலரும் முட்டுக் கொடுக்கின்றனர்.
சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் குறித்து நான் பேசினேன். ஜெயலலிதா இதை வைத்து திமுகவை கடுமையாக விமர்சிப்பார். நாமும் அதே விஷயத்தை எடுத்துப் பேசினால், “நீ ஏன் பேசுகிறாய்?” என்று கேட்கின்றனர்.
இதற்கு திமுக கவலைப்பட்டால் பரவாயில்லை. ஆனால், மற்றவர்கள் கோபப்படுவது ஏன் என்று புரியவில்லை. “இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பேசியதைத்தானே நான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன். என் பக்கம் திரும்பிவிட்டீர்களே” என்று கூற வேண்டியுள்ளது. நாமே குழப்பமடையும் அளவுக்கு இப்படி ஒரு முட்டுக் கொடுப்பா?
### நல்லது மட்டும்
எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போன்று இன்று தைரியமாக திமுகவை எதிர்ப்பது விஜய் மட்டும்தான். அது எம்ஜிஆர் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் என்னென்ன கணக்குகளைப் போட்டு, புதிதாக திட்டமிட்டு எப்படி ஆட்சியைக் கலைக்கலாம் என்று நினைக்கின்றனர்.
எனக்கும் மக்களுக்கும் இருப்பது அன்புக் கணக்கு; தேர்தலைக் கடந்த பாசக் கணக்கு. இதை திமுகவினாலும் உடைக்க முடியாது. கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பவர்களுக்கும் இது புரியாது.
வீட்டில் உள்ள பச்சைப் பிள்ளைகள் முதல் தாத்தா, பாட்டி வரை அனைவரும் எனது சொந்தங்கள், நமது உறவுகள். எப்பாடு பட்டாவது நல்லது செய்வேன். நல்லது மட்டுமே செய்வேன். எந்த எல்லைக்கும் செல்வேன்.
தாராபுரம் மக்களிடம் ஒரு வாக்குறுதி வேண்டும். திமுகவுக்கு வாக்களிப்பீர்களா? அதேபோல் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மற்றவர்களுக்கும் வாக்களிப்பீர்களா? உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
திமுகவை எதிர்த்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சாதி, மதம் பார்க்காமல் உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும், நேர்மையாகவும், உயிராகவும் இருந்துள்ளீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அது எனக்கு நன்றாகத் தெரியும்.
கொங்கு மக்கள் உழைக்கும் மக்கள். நீங்கள் எப்போதும் சத்தியத்தின் பக்கம்தான் நிற்பீர்கள். சத்தியபாமாவுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன். உறுதியாக நம்புகிறேன்.
### பிள்ளைகளின் ஆட்சி
இந்த இருவரில் யாருக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான். இருவரும் ஒன்றுதான். வெளியில் மட்டுமே வேஷம் போடுகின்றனர். இருவரும் கூட்டாக இருக்கின்றனர். இருவரும் கூறும் பொய்களை நம்பாதீர்கள். நமது ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று சதி செய்த இருவருக்கும் பாடம் புகட்ட வேண்டும்.
அன்று நடந்தது அம்மா ஆட்சி. அதன்பிறகு நடந்தது அப்பா ஆட்சி. இப்போது நடப்பது நம் வீட்டு பிள்ளைகளின் ஆட்சி. இது உண்மையான ஆட்சி.
இவ்வாறு விஜய் பேசினார்.



