எங்களுக்கு மன்னராட்சி மனப்பான்மை கிடையாது: முதல்வர் விஜய்
1 ஐப்பசி 2026 வியாழன் 08:51 | பார்வைகள் : 193
“எங்களுக்கு மன்னராட்சி மனப்பான்மை கிடையாது” என தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் பேசினார்.
### பிரசாரம்
தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சித்ரவுத்தன்பாளையம் பகுதியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தில் திறந்த வேனில் நின்றபடி விஜய், விசில் ஊதியவாறு பிரசாரத்துக்கு வந்தார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் தெரிவித்த வணக்கத்துக்கு கையசைத்தும், வணக்கம் தெரிவித்தும் விஜய் பதிலளித்தார். அவரை அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் பேசியதாவது:
2026 தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டார்கள் என்பதையும், திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதையும் மறந்துவிட்டு, இன்னமும் நாம்தான் முதல்வர், நமது குடும்பம்தான் அதிகாரத்தில் இருக்கிறது என்றும், குடும்பத்துக்கு கீழ் அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர். ஆனால், எங்களுக்கு அத்தகைய மன்னராட்சி மனப்பான்மை கிடையாது.
### மக்களுக்காக...
“மக்களிடம் செல், மக்களுடன் வாழ்” என்று அண்ணாதுரை கூறியதை நாம் பின்பற்றுகிறோம். ஆனால், அவரையும் அவர் தொடங்கிய கட்சியையும் மறந்துவிட்டு, திமுகவுடன் மறைமுகமாகவும் பினாமியாகவும் கூட்டுச் சேர்ந்து சுயநலத்துடன் செயல்படுபவர்கள் நாம் அல்ல.
நாங்கள் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்கள் எங்களுக்கு வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். மக்கள் நம்மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே “எம்மதமும் சம்மதம்” என்று கூறியதுடன், அதே நிலைப்பாட்டுடன்தான் அரசியலுக்கும் வந்துள்ளோம். கடவுள் நம்பிக்கை இருப்பதாக கூறியபோதும், மற்றவர்களின் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் தெரிவித்தோம்.
மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களா, இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் அனைவரையும் மதிக்கிறோம். அதனால், நமது கொள்கை மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையாகும். நமது கூட்டணியின் பெயரும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி.
கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் நாம் வாழ்த்து தெரிவிப்போம். நமக்கு அனைவரும் ஒன்றுதான். மற்றவர்களைப் போன்று பம்மிப் பதுங்கிக்கொண்டு, திமுகவைப் போன்று இருக்க மாட்டோம்.
திமுக தலைவர்களுக்கு மறதி அதிகமாகிவிட்டது. அந்த மறதியிலேயே உண்மையை வெளிப்படுத்தி விடுகின்றனர். அண்ணாதுரை காலத்தில் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தி, அன்றைக்கு இருந்த மன்னர்களை தோற்கடித்ததாக கூறினர்.
அண்ணாதுரை காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும், நமது காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அதைவிட சாதாரணமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி திமுகவின் மன்னர்களையும், குறுநில மன்னர்களையும் தோற்கடித்திருக்கிறோம்.
### வரலாறு திரும்பியது
எம்ஜிஆர், அண்ணாதுரை காலத்தைப் போன்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. “வரலாறு திரும்பியது” என்று திமுக பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
இதன் பொருள் புரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவுக்கு மக்கள் ஓங்கி அடித்திருக்கிறார்கள். அது தெரியாமல் அருகில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுச்செயலாளருக்கு தலைமையுடன் என்ன பிரச்னை என்பது அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு விஜய் பேசினார்.



