கேப்டன் சுமித் மச்சார் செயலால் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி

கேப்டன் சுமித் மச்சார் செயலால் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி

1 ஐப்பசி 2026 வியாழன் 12:14 | பார்வைகள் : 296


மும்பையைச் சேர்ந்தவரும், குர்கானில் விமானி பயிற்சியை முடித்தவருமான கேப்டன் சுமித் மச்சார், காயமடைந்த நிலையிலும் பிளைதுபாய் விமானத்தின் கட்டுப்பாட்டை தன் வசப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவரது துணிச்சலான செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிளைதுபாய் விமான நிறுவனத்தில் இந்திய விமானியாக சுமித் மச்சார் பணியாற்றி வருகிறார். துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தில், சக விமானி அவரை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையிலும், பலத்த காயங்களுடன் போராடி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 174 பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சுமித் மச்சார், குர்கானில் விமானி பயிற்சியை நிறைவு செய்தவர். தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை அவர் ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் விமானக் குழுவினர் காக்பிட் கதவைத் திறந்து, தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்தினர்.

2023-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றிய சுமித் மச்சாரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் வணிக ரீதியான விமானி உரிமத்திற்கான பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். அவருக்கு பயிற்சி அளித்த மூத்த விமானி, “அவரைப் பற்றி எதிர்மறையாக கூறுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

சுமித் மச்சாரின் சகோதரரும் விமானியாக உள்ளார். அவரும் பிளைதுபாய் நிறுவனத்திலேயே பணியாற்றி வருகிறார்.

### சுமித் மச்சார் ஒரு ஹீரோ!

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கேப்டன் சுமித் மச்சார் ஒரு ஹீரோ. மிகக் கடுமையான ஆபத்து நிறைந்த சூழ்நிலையிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர் வெளிப்படுத்திய துணிச்சலும் மன உறுதியும் பாராட்டுக்குரியது.

அவரது வீரமிக்க செயலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன், மிகப்பெரிய துயரமும் தவிர்க்கப்பட்டுள்ளது. கேப்டன் சுமித் மச்சாரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் செயல்பட பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க