ஆதார் சேவைகளுக்கு 5 புதிய திட்டங்கள் அறிவிப்பு

ஆதார் சேவைகளுக்கு 5 புதிய திட்டங்கள் அறிவிப்பு

1 ஐப்பசி 2026 வியாழன் 13:16 | பார்வைகள் : 201


இந்தியாவில் ஆதார் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவது வரை பல்வேறு அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது.

பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், முக அடையாளம் மூலம் ஆதார் சரிபார்ப்பு உள்ளிட்ட 5 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் நடைபெற்ற 17-வது ஆதார் தினத்தை முன்னிட்டு, யுஐடிஏஐ சார்பில் ‘ஆதார் சம்வாத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆதார் சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

### முக அடையாளம் மூலம் சரிபார்ப்பு

இ-பிடிஎஸ் எனப்படும் மின்னணு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் உள்ளிட்ட சேவைகளைப் பெறுபவர்கள், இனி விரல் ரேகைக்கு மாற்றாக முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.

### ‘ஸ்விக் போர்ட்டல் 2.0’

ஆதார் சரிபார்ப்பு சேவையைப் பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் ‘ஸ்விக் போர்ட்டல் 2.0’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

### புதிய டோக்கன் முறை

ஆதார் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்காக யுஐடிஏஐ-யின் மாநில மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களின் வருகையை ஒழுங்குபடுத்த புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் குறையும்.

### துணை தளங்கள்

குறைந்த எண்ணிக்கையிலான ஆதார் சரிபார்ப்புகள் மட்டுமே தேவைப்படும் அரசு மற்றும் தகுதி பெற்ற அரசு சாரா நிறுவனங்களுக்காக துணை தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

### புதுப்பிக்கப்பட்ட இணையதளம்

ஆதார் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் யுஐடிஏஐ இணையதளமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் சேவைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் எளிதாகப் பெற முடியும்.
 

தொடர்ந்து படிக்க