2030இல் சுற்றுலாத்துறை ஊடாக வருமானம் பெற திட்டம்
1 ஐப்பசி 2026 வியாழன் 16:33 | பார்வைகள் : 235
2030ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஆண்டுக்கு 8 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதே இலங்கையின் இலக்காகவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, கடந்த 2024ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதுடன் அவ்வாண்டு 3.1 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 2025ஆம் ஆண்டில் 2,362,521 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இவ்வாறு வருகைத்தந்த சுற்றுலாப்பயணிகள் ஊடாக 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது. அந்தவகையில் 2026ஆம் ஆண்டில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதை இலக்காக கொண்டு செயற்பட்டுவருகின்றது. அதன்படி, ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,535,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். இதன்ஊடாக 2 பில்லியன் டொலருக்கும் அதிக வருமானம் சுற்றுலாத்துறை ஊடாக கிடைத்திருக்கிறது.
2030ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்துவந்து சுற்றுலாத்துறை ஊடாக 8 பில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்வதே பிரதான இலக்கு என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum - WEF) ‘சுற்றுலா மற்றும் பயண வளர்ச்சிச் சுட்டெண்’ (Travel and Tourism Development Index) அறிக்கையின்படி, உலகின் சுற்றுலாத்துறையில் அதிவேகமாக முன்னேறி வரும் (Fastest-Improving / Global Risers) முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் 10ஆம் இடத்தைப் பிடித்து உள்வாங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிறகு, சர்வதேச சுற்றுலாத்துறை மிகவேகமாக மீட்சியடைந்து வருகிறது. இதில் பாரம்பரியமாக முன்னணி வகிக்கும் பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளை விட, வளர்ந்து வரும் பல நாடுகள் புதுமையான உத்திகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுலா நடைமுறைகள் மூலம் அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.
உலகப் பொருளாதார மன்றத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில், சுற்றுலாத்துறை திறன்களில் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலுக்குள் அல்பேனியா (Albania), வியட்நாம் (Vietnam), லாஓஸ் (Laos) , சவூதி அரேபியா (Saudi Arabia), எகிப்து (Egypt), மொரோக்கோ (Morocco), மெக்சிகோ (Mexico), இந்தோனேசியா (Indonesia), துருக்கி (Türkiye) மற்றும் இலங்கை (Sri Lanka) ஆகிய 10 நாடுகள் இடம்பிடித்துள்ளன.
1. அல்பேனியா (Albania)
"ஐரோப்பாவின் மறைக்கப்பட்ட இரத்தினம்" என சந்தைப்படுத்தப்பட்டு, குறைந்த செலவிலான ஆடம்பர சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளது. கடற்கரை மண்டலங்களை மறுசீரமைத்தல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் விசா விலக்குக் கொள்கைகள் என்பன அந்நாட்டு சுற்றுலாத்துறை எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.
2. வியட்நாம் (Vietnam)
கலாசார சுற்றுலா மற்றும் இயற்கை சூழல் சுற்றுலத்தளமாக மாற்றப்பட்டுள்ளது. இ-விசா (E-visa) நடைமுறையை 90 நாட்களுக்கு விரிவுபடுத்தியது. 'டா நாங்' (Da Nang) மற்றும் 'பூ குவோக்' (Phu Quoc) தீவுகளை சர்வதேச சுற்றுலா மையங்களாக மாற்ற உட்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ததன் ஊடாக இந்நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டது.
3. லாஓஸ் (Laos)
இயற்கை மற்றும் ஆன்மீகப் பயண அனுபவங்களை வழங்கும் நாடாக திகழ்கிறது.சீனா-லாஓஸ் அதிவேக இரயில் பாதை இணைப்பு மூலம் அண்டை நாட்டுச் சுற்றுலாவைப் பெருமளவில் ஈர்த்துக்கொண்டுள்ளது.
4. சவூதி அரேபியா (Saudi Arabia)
'விஷன் 2030' (Vision 2030) திட்டத்தின் கீழ் எண்ணெய்ச் சாராத பொருளாதார மாற்றத்தை கொண்ட நாடாக காணப்படுகிறது. : 'Red Sea Project' மற்றும் 'NEOM' போன்ற பல பில்லியன் டொலர் மதிப்பிலான பாரிய சுற்றுலாத் திட்டங்கள் இத்துறையின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது. 'AlUla' பாரம்பரிய மையத்தைப் புதுப்பித்து, 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உடனடி சுற்றுலா விசாவையும் இந்நாடு வழங்கியது.
5. எகிப்து (Egypt)
வரலாற்று சுற்றுலா மறுமலர்ச்சியை ஏற்படுத்திய நாடாக காணப்படுகிறது. 'கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம்' (Grand Egyptian Museum) திறக்கப்பட்டமை மற்றும் தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகளைப் உலகளவில் விளம்பரப்படுத்தியதன் மூலம் வரலாற்று ஆர்வலர்களை இந்நாடு ஈர்த்தது.
6. மொரோக்கோ (Morocco)
'Roadmap 2026' சுற்றுலாத்திட்டத்தை குறிப்பிடலாம். இதன் ஊடாக ஐரோப்பிய நகரங்களுடனான நேரடி விமான சேவைகளை அதிகரித்தது. பாரம்பரிய கலாசார நகரங்களான மராகேச் மற்றும் ஃபெஸ் ஆகியவற்றை மேம்படுத்தியதோடு, சஹாரா பாலைவனச் சுற்றுலாவை ஊக்குவித்தது.
7. மெக்சிகோ (Mexico)
கலாசாரம், உணவு மற்றும் கடற்கரைச் சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற நகரமாக திகழ்கிறது. 'Maya Train' போன்ற புதிய ரயில் திட்டங்கள் மூலம் தென்கிழக்கு பிராந்தியத்தின் மாயன் வரலாற்று மையங்களை இணைத்தது.
8. இந்தோனேசியா (Indonesia)
பாலிக்கு மட்டுமின்றி லோம்போக், லபுவான் பாஜோ போன்ற பிற தீவுகளுக்குச் சுற்றுலாவை பரவலாக்கியது. 'டிஜிட்டல் நோமட்' (Digital Nomad Visa) விசாக்களை அறிமுகப்படுத்தியது.
9. துருக்கி (Türkiye)
மருத்துவ, சுகாதாரச் சுற்றுலா மற்றும் வரலாற்றுப் பயணங்களை பெருமளவு விரிவுப்படுத்திய நாடாக காணப்படுகிறது. இஸ்தான்புல் விமான நிலையத்தை சர்வதேச மையமாக உயர்த்தியமை மற்றும் சுகாதாரச் சுற்றுலாவை அரசின் ஊக்கத்தொகைகள் மூலம் பலப்படுத்தியமை என்பனவற்றை குறிப்பிடலாம்.
10. இலங்கை (Sri Lanka)
பொருளாதார சவால்களுக்குப் பிந்தைய மீட்சியில், மிகக்குறைந்த செலவிலான சுற்றுலா வசதி, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக இத்துறையின் வளர்ந்துவரும் நாடாக காணப்படுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட முக்கிய நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா / நுழைவு அனுமதி வசதி அளித்துள்ளது. 'You'll Come Back for More' போன்ற உலகளாவிய சந்தைப்படுத்தல் பிரசாரங்கள். சாகச மற்றும் ஆயுர்வேத சுற்றுலா வசதிகள், எல்ல ரயில் பயணம், மிரிஸ்ஸ திமிங்கலப் பார்வைகள், நுவரெலியா தேயிலைத் தோட்டப் பகுதிகள் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையங்களை பிரபலப்படுத்தியமை மற்றும் நீண்டகாலமாகத் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கும் உத்திகள் என்பனவும் இலங்கையின் சுற்றுலாத்துறை எழுச்சிக்கு வழிசமைத்தது எனலாம்.
கடந்த காலங்களில் சராசரியாக ஒரு சுற்றுலாப்பயணி ஒரு நாளைக்குச் செய்யும் செலவை விட (சுமார் $160 - $180), உயர் மட்டச் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதன் மூலம் இந்த வருமான இலக்கை எட்ட முடியும் என துறைசார்ந்த அமைப்புகள் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வெறும் கடற்கரைச் சுற்றுலாவோடு நிற்காமல், ஆன்மீகம், கலாசாரம், ஆயுர்வேத மருத்துவ சுற்றுலா , சாகசச் சுற்றுலா மற்றும் வணிக நிகழ்வுகள் போன்ற துறை சார்ந்த விரிவாக்கங்கள் அதிக வருவாயைத் தரும்.
இலங்கை சமீபத்தில் WEF இன் ‘வேகமாக முன்னேறும் சுற்றுலா நாடுகள்’ பட்டியலில் 10ஆம் இடத்தை பிடித்துள்ளதும், இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் விசா எளிமைப்படுத்தல்களும் சர்வதேசப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்த சுற்றுலாத்துறை மிக அத்தியாவசியமான ஊக்கியாக இருப்பதால், அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளித்து உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த வேண்டியுள்ளது.
ஆண்டுக்கு 4 மில்லியன் பயணிகளைக் கையாள விமான நிலையங்கள், உள்நாட்டுப் போக்குவரத்து, தங்குமிடங்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பெருமளவில் உயர்த்த வேண்டியுள்ளது. கடந்த காலப் பொருளாதார நெருக்கடியால் பல அனுபவமிக்க ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே இதற்கான புதிய மனிதவளப் பயிற்சியை உடனடியாக வழங்க வேண்டும்.
அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இயற்கைச் சூழலையும் உள்ளூர் மக்களின் வாழ்வியலையும் பாதிக்காதவாறு ‘நிலையான சுற்றுலா’ நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகள் வழங்கும் விலைச்சலுகைகள் மற்றும் அதிநவீன உட்கட்டமைப்புடன் இலங்கை போட்டியிட வேண்டியுள்ளது.
இ-விசா, டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் சமூக ஊடக சந்தைப்படுத்தல் ஆகியவை உடனடி வளர்ச்சியைத் தருகின்றன. அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகளின் வருகை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை உருவாக்குவது கட்டாயமாகும். திறமையான போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நேரடியாக உயர்த்துகிறது.
சுற்றுலாத்துறையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையின்இணைவானது, அதன் இயற்கை வளம் மற்றும் சுற்றுலா சாத்தியக்கூறுகளுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும். உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள, உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், சூழலுக்குப் பாதிப்பில்லாத நிலையான சுற்றுலா நடைமுறைகளைத் தொடர்வது அவசியமாகும் என்பதே துறைசார் ஆர்வலர்களது பரிந்துரையாகவுள்ளது.
2030இல் 8 பில்லியன் இலக்கை அடைவதற்கு வெறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் நம்பி இருக்காமல், ஒரு பயணி இலங்கையில் செலவிடும் தொகையையும் நாட்களையும் அதிகரிப்பதிலேயே இந்த இலக்கின் வெற்றி தங்கியுள்ளது. சரியான சந்தைப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தடையற்ற உட்கட்டமைப்பு மேம்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டால் இந்த இலக்கு நிச்சயம் சாத்தியமாகும்.
நன்றி வீரகேசரி



