2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: வரி உயர்வு, குடும்ப உதவித்தொகைகள் முடக்கம்!!
1 ஐப்பசி 2026 வியாழன் 15:48 | பார்வைகள் : 1297
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளை பிரதமர் Sébastien Lecornu தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நாட்டின் பொதுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (PIB) 5 சதவீதமாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு, 43 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2026ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சேர்த்து, 2027ஆம் ஆண்டில் மொத்தம் 54 பில்லியன் யூரோக்கள் அளவிலான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பெறுமதி சேர் வரி (TVA) மூலம் கிடைக்கும் வருவாய் 7 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமாகவும், வருமான வரி மூலம் கிடைக்கும் வருவாய் 5.7 பில்லியன் யூரோக்களாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, நிறுவனங்களுக்கான வரி வருவாய் 1.8 பில்லியன் யூரோக்கள் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப உதவித்தொகை (Allocations familiales), வீட்டு வாடகை உதவித்தொகை (APL) உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களின் தொகைகளை 2027ஆம் ஆண்டில் 2026ஆம் ஆண்டின் அதே அளவில் முடக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப உதவித்தொகையில் 500 மில்லியன் யூரோக்களாகவும், பாடசாலை ஆரம்ப உதவித்தொகையில் (Allocation de rentrée scolaire) 600 மில்லியன் யூரோக்களாகவும் செலவைக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான APL உதவியிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
சுகாதாரச் செலவுகளின் அதிகரிப்பை 2 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவதுடன், சில மருந்துகளுக்கான அரசின் செலவுத்திருப்பிச் செலுத்தும் வசதிகளைக் குறைத்து 5 பில்லியன் யூரோக்கள் சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத் தொகைகளிலும் மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது. மாதாந்தம் 1,260 யூரோக்கள் அல்லது அதற்குக் குறைவாகப் பெறுவோரின் ஓய்வூதியம் மட்டுமே பணவீக்கத்துக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கலாம். இதன்மூலம் ஓய்வூதியச் செலவில் 5.5 பில்லியன் யூரோக்கள் சேமிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், மறக்கப்பட்ட அல்லது நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் சேமிப்புத் தொகைகளிலிருந்து 17 சதவீதம் விசேட வரி அறவிட்டு 1.4 பில்லியன் யூரோக்கள் திரட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும், உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் பின்னர் அந்தத் தொகையைக் கோரும்போது, வட்டியுடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களின் இலாபத்திற்கான விசேட வரி தொடர்ந்தாலும் அதன் அளவு குறைக்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையிலும் மொத்தமாக 1,076 பேர் குறைக்கப்படவுள்ளதாகத் திட்டம் தெரிவிக்கிறது; அதேநேரம் கல்வி, பாதுகாப்பு, உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சுகளில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதவித்திட்டங்களின் செலவுகளைக் குறைப்பதுடன், விமான எரிபொருள் வழங்குநர்களுக்கு புதிய வரி விதித்து நிலையான விமான எரிபொருளுக்கான நிதியைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், உதவித்தொகை பெறாத மாணவர்களுக்கு BTS கற்கைநெறி சேர்க்கைக்கு 178 யூரோக்களும், உயர்கல்வி தயாரிப்பு வகுப்புகளுக்கு 270 யூரோக்களும் கட்டணம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.



