அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணை
2 ஐப்பசி 2026 வெள்ளி 05:48 | பார்வைகள் : 186
### ரூ.100 கோடி மோசடி புகார்
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. பிரமுகர் அரசகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் போலீசார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணையும் மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
### அமலாக்கத்துறை விசாரணை
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான ரூ.100 கோடி ஊழல் புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக நடைபெற்றதாக கூறப்படும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அரசகுமார் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறை பெற்றுள்ளது.



