இந்திய விமானி உடல்நிலை: தூதரகம் தகவல்

இந்திய விமானி உடல்நிலை: தூதரகம் தகவல்

2 ஐப்பசி 2026 வெள்ளி 07:16 | பார்வைகள் : 354


சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் காயங்களில் இருந்து விரைவில் குணமடைவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேலுக்குச் சென்ற விமானத்தை கடத்த துணை விமானி ஒருவர் மேற்கொண்ட முயற்சியை இந்திய விமானி சுமித் மச்சார் முறியடித்ததாக கூறப்படுகிறது. கத்திக்குத்து காயம் ஏற்பட்ட நிலையிலும் துணிச்சலுடன் போராடி விமானத்தை மீட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த விமானி சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

**இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:**

தபூக்கிற்கு திருப்பிவிடப்பட்ட ப்ளைதுபாய் விமானத்தில் நடைபெற்ற கடத்தல் முயற்சியை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலையை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காயங்களில் இருந்து விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்.

மேலும், சுமித் மச்சாரின் குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. சவுதி அதிகாரிகளுடன் இணைந்து அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவரது நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என அவரது குடும்பத்தினருக்கு உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்ந்து படிக்க