மகிழ்வுடன் கதராடைகள் அணிவோம்: மக்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
2 ஐப்பசி 2026 வெள்ளி 09:48 | பார்வைகள் : 225
மகிழ்வுடன் கதராடைகளை அணிந்து, நெசவாளர்களின் வாழ்க்கையில் வெற்றியை ஏற்படுத்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு கதராடையை வாங்குவது என்பது, ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு நாம் வழங்கும் அங்கீகாரமாகும். அதேபோல், ஒரு கிராமப் பொருளை வாங்குவது என்பது, ஒரு கைவினைக் கலைஞரின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதையாகும். உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தும்போது, அது நம் மண்ணின் உற்பத்தித் திறனுக்கு ஊக்கமளிக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் மூலம் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடியில் கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு வகை ஆடைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி, நம் நூற்பாளர்கள், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்படுத்த வேண்டும்.
கதரை தேர்வு செய்வோம்; கைத்திறனை போற்றுவோம்; உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு அளிப்போம். மகிழ்ச்சியுடன் கதராடைகளை அணிந்து, நெசவாளர்களின் வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



