அபராதம் செலுத்தாத வாகனங்களுக்கு சேவைகள் முடக்கம்: சுப்ரீம் கோர்ட்
2 ஐப்பசி 2026 வெள்ளி 10:58 | பார்வைகள் : 169
### நிலுவை அபராதம்: சேவைகளை முடக்க உத்தரவு
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோரிடம் இருந்து அபராதத் தொகையை கடுமையாக வசூலிக்க வேண்டும். நிலுவையில் உள்ள அபராதத்தை செலுத்தும் வரை, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், வாகனத்தை விற்பனை செய்யும்போது உரிமையாளர் பெயரை மாற்றுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவைகளையும் வழங்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் இயக்குவோருக்கு ‘இ-சலான்’ எனப்படும் மின்னணு அபராதச் சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அபராதத் தொகையை செலுத்துவதில் பல வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யும் நேரத்தில் மட்டுமே நிலுவையில் உள்ள அபராதத்தை செலுத்துகின்றனர். இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான இ-சலான்களுக்கான அபராதத் தொகை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
### விதிமீறல்
கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அபராதத் தொகையை வாகன ஓட்டிகளின் வீட்டு மின் கட்டணத்துடன் இணைக்கலாம் என உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு வாய்மொழியாக யோசனை தெரிவித்திருந்தது. இதன் மூலம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் அபராதத்தை செலுத்த முன்வருவார்கள் என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல்வேறு காலகட்டங்களில் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.49,194.05 கோடி என்றும், இதில் இதுவரை அதிகாரிகளால் ரூ.25,175.05 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு மின்னணு முறையில் அபராதம் விதிப்பதைவிட, அந்த அபராதத் தொகையை வசூலிப்பதே முக்கியமானது. அப்போதுதான் சாலை போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த முடியும். எனவே, அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
### தயங்கக்கூடாது
மத்திய அரசின் ‘பரிவாஹன்’ இணையதளத்தில், அபராதம் செலுத்தப்படாத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கும், உரிமையாளர் பெயரை மாற்றுவதற்கும் தடை விதிக்கப்படும்.
நிலுவையில் உள்ள அபராதத் தொகை செலுத்தப்படும் வரை, வாகனங்களுக்கான எப்.சி. எனப்படும் தகுதிச் சான்றிதழை வழங்கக் கூடாது. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
ஆர்.சி. எனப்படும் வாகனப் பதிவு சான்றிதழை புதுப்பித்தல், நகல் ஆர்.சி. வழங்குதல், லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட இணையவழி சேவைகளையும் வழங்கக் கூடாது. நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்திய பின்னரே இந்த சேவைகளைப் பெற அனுமதிக்க வேண்டும்.
தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி, அபராதத் தொகையை செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை தேவையான நிலையில் தற்காலிகமாக ரத்து செய்வதற்கும் தயங்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
### 126 முறை அபராதம்: ரூ.10.30 லட்சம் நிலுவை
ஹரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து போலீசார் நேற்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி, அதற்கான ஆவணங்களை போலீசார் கேட்டனர். இதனால் வாகன ஓட்டி அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து, அந்த வாகனம் தொடர்பான விவரங்களை மின்னணு முறையில் போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த வாகன ஓட்டி மொத்தம் 126 முறை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், ரூ.10.30 லட்சம் அளவிலான அபராதத் தொகையையும் அவர் செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக அந்த வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.



