திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
2 ஐப்பசி 2026 வெள்ளி 11:01 | பார்வைகள் : 221
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக முந்தைய அரசின் நிலைப்பாடே தற்போதைய அரசாலும் தொடரப்படுகிறதா அல்லது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் முந்தைய அரசின் நிலைப்பாடே தற்போதைய அரசுக்கும் உள்ளதா என்றும், அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முந்தைய அரசின் நிலைப்பாடே தற்போதும் தொடர்வதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



