வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: மும்பை ஐகோர்ட் கண்டனம்

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: மும்பை ஐகோர்ட் கண்டனம்

2 ஐப்பசி 2026 வெள்ளி 12:06 | பார்வைகள் : 158


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர்களின் பெயரை நீக்க முடியாது. முறையான விசாரணை மற்றும் உரிய வாய்ப்பு வழங்காமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க எந்த சட்டம் வழிவகுக்கிறது என மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவாவின் பணஜியில் உள்ள சான்டா க்ரூஸ் சட்டசபைத் தொகுதியில் பரேஷ் சல்கோங்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் சமீபத்தில் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இதையடுத்து, எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வந்த நிலையில், முகவரி மாற்றம் செய்வதற்காக பூத் நிலை அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, பரேஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வாக்காளர்களும் படிவம்-8 சமர்ப்பித்தனர்.

ஆனால், தேர்தல் கமிஷனின் ‘இஆர்ஓநெட்’ மென்பொருளில் இவர்களின் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தரவுகள் இல்லாததால், படிவம்-8 விண்ணப்பத்தில் பிழை இருப்பதாகக் காட்டப்பட்டது. மேலும், அந்த மென்பொருளில் ‘நிராகரிப்பு’ என்ற ஒரே தெரிவு மட்டுமே இருந்ததால், விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியாது என உதவி தேர்தல் பதிவு அதிகாரி தெரிவித்தார்.

ஏற்கனவே பல தேர்தல்களில் வாக்களித்த இவர்களிடம், முதல்முறை வாக்காளர்கள் பயன்படுத்தும் படிவம்-6-ஐ சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை எதிர்த்து பரேஷ் குடும்பத்தினர் மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் அமித் ஜாம்சன்டேகர் மற்றும் வால்மீகி மெனேசெஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

தேர்தல் கமிஷனின் மென்பொருள் இடமளிக்கவில்லை என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரை நீக்க முடியாது. வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பெயரை நீக்கினால், படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றின் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும்.

முறையான விசாரணை நடத்தாமலும், உரிய வாய்ப்பு அளிக்காமலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க எந்த சட்டம் அனுமதிக்கிறது? தேர்தல் அதிகாரிகள் தங்களது பொறுப்பை தவிர்த்து, அனைத்தையும் மென்பொருளின் மீது சுமத்துகின்றனர்.

இந்த குடும்பத்தினர் முகவரி மாற்றத்திற்காக மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்; அவர்கள் முதல்முறை வாக்காளர்கள் அல்ல. இவர்களைப் போல முகவரி மாற்றியுள்ள பலர் இருக்கலாம். நீதிமன்றத்தை அணுகாமல் இருக்கும் வாக்காளர்களும் அதிகமாக இருக்கலாம். இந்த நடைமுறை நிலையை தேர்தல் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

முகவரி மாற்றம் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் தங்களது சுய பரிசீலனையுடன் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தொடர்ந்து படிக்க