மாணவர்கள் போராட்டம் தீவிரம்: 400 பாடசாலைகள் மூடல்; ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை!!

மாணவர்கள் போராட்டம் தீவிரம்: 400 பாடசாலைகள் மூடல்; ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை!!

2 ஐப்பசி 2026 வெள்ளி 07:29 | பார்வைகள் : 2312


மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ள சுமார் 400 பாடசாலைகளுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதித்து அனைத்து மாவட்ட ஆளுநர்களும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அக்டோபர் மாதம் 1ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இந்தத் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை முடக்கும் போராட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பரிஸ் காவல்துறை தலைமையகத்தின் ஆளுநர் Patrice Faure, வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ள பரிஸ் நகரின் 13 பாடசாலைகளுக்கு அருகில் ஒன்றுகூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் 400 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் Edouard Geffray ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்ற போராட்டங்களில் 235 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 170 பேர் மாணவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாணவர் போராட்டம் வன்முறைக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டங்களின் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் மாணவர் அமைப்புகள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள், பெற்றோர் சங்கங்கள் மற்றும் தேசிய மாணவர் மன்றப் பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையின் நலன்களுக்காக இந்தச் சந்திப்புகள் மூலம் நடைமுறை முன்னேற்றங்களை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஆர்ப்பாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

தொடர்ந்து படிக்க