வெற்றிப்பயணம் திட்டம் தொடக்கம்: பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கிய விஜய்
2 ஐப்பசி 2026 வெள்ளி 13:42 | பார்வைகள் : 225
தமிழகம் முழுவதும் மகளிருக்கான இலவச ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமைந்தால் மகளிருக்கான இலவச பயணத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
‘வெற்றிப் பயணம்’ திட்டம்
தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தற்போது செயல்பாட்டில் உள்ள மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான உச்சவரம்பு அல்லது பயண எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. மேலும், ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இதர சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.
திட்டம் தொடக்கம்
இந்த நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் ஏறிய அவர், பெண் பயணிகளுக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கினார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று அங்கு அமர்ந்திருந்த பெண்களிடம் டிக்கெட்டுகளை வழங்கினார்.
அப்போது பெண் பயணிகள் முதல்-அமைச்சர் விஜய்க்கு சாக்லெட் வழங்கியும், கைகளால் சுற்றிப்போட்டும் தங்களது நன்றியை தெரிவித்தனர். பதிலுக்கு விஜய்யும் அவ்வாறு செய்தார். மேலும், பெண் பயணிகளுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்-அமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெண்கள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.
12,695 பேருந்துகள்
தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 12,695 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.
7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 பேருந்துகளில் 12,695 பேருந்துகள் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும். அதேபோல், மொத்தமுள்ள நடைகளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெற உள்ளனர்.



