வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணி முறிவு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.
2 ஐப்பசி 2026 வெள்ளி 13:40 | பார்வைகள் : 240
தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையேயான கூட்டணி விவகாரம் குறித்து இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். பல்வேறு காரணங்களால் தங்களால் அந்தப் படத்தை ஆரம்பிக்க முடியவில்லை என்றும், அதற்காகத் தங்களுக்குள் எந்தவிதமான மனக்கசப்புகளும் இல்லை என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தனக்கு எப்போதும் மிகவும் அன்பான நண்பரும் சகோதரரும் போன்றவர் என்று குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, சரியான கதையும் நேரமும் அமையும் போது அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பான அனைத்து விவாதங்களுக்கும் இந்த பதிவின் மூலமாக முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநரின் இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “சார், நாம் ஒரு குடும்பம், இதற்காக நீங்கள் இவ்வளவு தீவிரமாகப் பதிலளிக்கத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், தான் எப்போதும் வெங்கட் பிரபுவின் தீவிர ரசிகன் என்றும், விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறி இந்த விவகாரத்திற்கு மகிழ்ச்சியான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



