Paristamil Navigation Paristamil advert login

மாற்றம் தொடர்ச்சியான பயணம்: அண்ணாமலை

மாற்றம் தொடர்ச்சியான பயணம்: அண்ணாமலை

30 ஆவணி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 116


மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல; அது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணம் என, வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக நலனுக்காகவும், எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்காகவும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தன்னலமற்ற முறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றம் என்பது ஒரே நாளில் ஏற்படக்கூடியது அல்ல. அது தொடர்ச்சியான பயணம். சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தங்களின் விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரத்தையும் நமது அமைப்பின் பணிகளுக்காக செலவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக ஆகஸ்ட் மாதத்தில், இதுவரை 1,400க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள், கழிவுகளை முறையாகப் பிரித்தல், மரக்கன்றுகள் நடுதல், பசுமைப் பணிகள், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் நமது சகோதர, சகோதரிகள் தொடர்ந்து இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

**175 டன் குப்பைகள்**

தமிழகம் முழுவதும் இதுவரை 175 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதுடன், மக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மூலம் புதிதாகக் கண்டறியப்படும் பணிகளையும் மேற்கொள்வது அவசியமாகும்.

சில திட்டங்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

**நமது நோக்கம்**

இந்தப் பணிகளை அவசரமாக முடிப்பதைவிட, அவை திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றப்பட்டு, அதன் பலன்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும் மக்களுக்கும் நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.

சமீபத்தில் நேபாளத்தில் பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம், இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பேரிடர்களை உருவாக்கக்கூடும் என்பதையும், அவற்றின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது சிறந்த எதிர்காலத்திற்கான முன்னெடுப்பு மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நமது தலையாய பொறுப்பும்கூட.

நமது அமைப்பின் ஒவ்வொரு தலைவரும் மேற்கொண்டுள்ள தன்னலமற்ற உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறோம்.

**பெண்கள் பாதுகாப்பு**

ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றி, நாம் எடுத்துக்கொண்ட இலக்கை தொடர்ந்து நிலைநிறுத்துவதே நமது உழைப்பின் உண்மையான வெற்றியாகும்.

எனவே, செப்டம்பர் மாத இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும். செப்டம்பர் மாதத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த நமது சமூகப் பணிகள் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்