Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம்: மு.க.ஸ்டாலின்

30 ஆவணி 2026 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 124


தி.மு.க. முப்பெரும் விழாவில், கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களின் பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

### மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

இதன்படி, கட்சி ரீதியாக தி.மு.க.வில் பிரிக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்கள் எவை, அவற்றில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் எவை என்பது குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

### மாவட்ட செயற்குழு கூட்டம்

தற்போது உள்ள 77 மாவட்ட செயலாளர்களும், புதிதாக உருவாக்கப்பட உள்ள 110 மாவட்டங்களில் எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள் கட்சி தேர்தல் மூலமாகவே நியமிக்கப்படுகின்றனர். அதற்கு முன்பாக, குறிப்பிட்ட மாவட்டத்தை கவனிப்பதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். கட்சி தேர்தல் மூலம் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை, அந்த பொறுப்பாளர்களே மாவட்ட நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார்கள்.

### முப்பெரும் விழாவில் அறிமுகம்

அந்த வகையில், தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

முப்பெரும் விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்