Paristamil Navigation Paristamil advert login

கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக் கூடாது? அமைச்சர்

கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக் கூடாது? அமைச்சர்

30 ஆவணி 2026 ஞாயிறு 12:17 | பார்வைகள் : 131


கோவில் நிலங்களை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியேற்றக் கூடாது என்றும், மீறி வெளியேற்றினால் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் சில வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

**இதுகுறித்து துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:**

கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது. நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே நேரத்தில், கோவில் நிலங்களை செல்வந்தர்கள் ஆக்கிரமித்திருந்தால், அவர்களை வெளியேற்றலாம். சாதாரண மக்கள் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் வாடகை செலுத்தாமல் இருந்தாலும், ஏதேனும் ஒரு தவணையை செலுத்தியிருந்தால், அதை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், அவர்களுக்கு வாடகை தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கி, அதற்கான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் என அமைச்சர் வாய்மொழியாக உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை பின்பற்றினால், கோவில் வருவாய் குறையும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

### 8,197 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு

ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வரும் கோவில்களின் நிலங்களை, நவீன புவியிடங்காட்டி கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின்னர், இரண்டு மாதங்களில் 8,197 ஏக்கர் கோவில் நிலங்களில் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்