Paristamil Navigation Paristamil advert login

வரிகளை உயர்த்தமாட்டோம்; விவசாயிகளுக்கு மீட்புத் திட்டம் – நோய்விடுப்பு சீர்திருத்தம்: Sébastien Lecornu அதிரடி அறிவிப்புகள்!!

வரிகளை உயர்த்தமாட்டோம்; விவசாயிகளுக்கு மீட்புத் திட்டம் – நோய்விடுப்பு சீர்திருத்தம்: Sébastien Lecornu அதிரடி அறிவிப்புகள்!!

30 ஆவணி 2026 ஞாயிறு 06:57 | பார்வைகள் : 210


பிரதமர் Sébastien Lecornu, வரி உயர்வு எதுவும் இருக்காது என உறுதியளித்துள்ளதுடன், விவசாயிகளுக்கு அவசரகால “ஆதரவு மற்றும் மீட்புத் திட்டம்” கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், எரிபொருள் கொள்வனவுக்கான உதவிகள் நீடிக்கப்படும் எனவும், நோய்விடுப்பு (arrêts maladie) முறையில் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து உண்மையான சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் செப்டெம்பர் இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதனை முடக்க முயன்றால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சூழலில், மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்ற முயல்வதை விட “50 சிறிய, பயனுள்ள மற்றும் நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை” எடுப்பதே யதார்த்தமான வழி என Sébastien Lecornu கூறியுள்ளார். சமூகச் செலவுகளில் பெரிய வெட்டுக்களோ, வரி உயர்வோ இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறைக்கு 6.4 பில்லியன் யூரோக்களும், சுற்றுச்சூழலுக்கு 1.1 பில்லியன் யூரோக்களும், தேசிய கல்விக்கு 800 மில்லியன் யூரோக்களும், உள்துறைக்கு 600 மில்லியன் யூரோக்களும், ஆராய்ச்சிக்கு 500 மில்லியன் யூரோக்களும், நீதித்துறைக்கு 400 மில்லியன் யூரோக்களும் கூடுதல் நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வீடமைப்பு, தொழில்பயிற்சி மற்றும் Complémentaire santé solidaire திட்டங்களிலும் வெட்டுக்கள் இருக்காது என உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, இந்த கோடையில் கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குளிர்காலத்தை சமாளிக்க “ஆதரவு மற்றும் மீட்புத் திட்டம்” விரைவில் கொண்டுவரப்படும் என்றும், 2027ஆம் ஆண்டில் விவசாயத் துறையை மீள எழுச்சி பெறச் செய்ய தனியான திட்டம் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சரான Annie Genevardடுடன் இணைந்து இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விவசாயிகளின் பணப்புழக்கப் பிரச்சினையை சமாளிக்க கடனுதவிகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்த லெகோர்னு, “இந்த அரசாங்கம் தேர்தல் பிரசாரத்திற்கானது அல்ல; பணியை நிறைவேற்றுவதற்கானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்