Paristamil Navigation Paristamil advert login

தொடர் கனமழையால் கங்கையில் கரைபுரண்டோடும் வெள்ளம்; மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் கனமழையால் கங்கையில் கரைபுரண்டோடும் வெள்ளம்; மக்களுக்கு எச்சரிக்கை

31 ஆவணி 2026 திங்கள் 08:37 | பார்வைகள் : 154


தொடர் கனமழை காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்வால் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ரிஷிகேஷில் கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ரிஷிகேஷ், முனி கி ரேதி மற்றும் லக்ஷ்மன் ஜூலா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கங்கையில் பாதுகாப்புடன் நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், மத்திய பிரதேசத்தின் சத்னா மற்றும் சித்ரகூட் பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சித்ரகூட் சென்ற முதல்வர் மோகன் யாதவ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், நிலைமையை கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் 3 நாட்கள் அங்கேயே முகாமிட்டு பணியாற்ற உத்தரவிட்டார்.

மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்