Paristamil Navigation Paristamil advert login

வேற்றுமையில் ஒற்றுமையே பாரதத்தின் இலக்கு' - நியூயார்க்கில் மோகன் பாகவத் பேச்சு

வேற்றுமையில் ஒற்றுமையே பாரதத்தின் இலக்கு' - நியூயார்க்கில் மோகன் பாகவத் பேச்சு

31 ஆவணி 2026 திங்கள் 09:53 | பார்வைகள் : 121


நியூயார்க்கில் நடைபெற்ற 'யுனிவர்சல் ஒன் 2026' விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

இந்தியா பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையிலும் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாடாக விளங்கி வருகிறது. தற்போதைய அரசியல் சூழல் சுயநலம் சார்ந்ததாக மாறி வருகிறது.

ஹிந்து மதம் மனிதகுலத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என எந்த ஹிந்துவாவது நினைத்தால், அவர் உண்மையான ஹிந்து அல்ல.

மதச் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், மனிதநேயம் ஒன்றே என்பதையே இந்திய கலாசாரம் நமக்கு கற்றுத்தருகிறது. பல்வேறு மதங்களின் நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும், அவை இறுதியில் ஒரே உண்மையையும் இறைத்தன்மையையுமே அடைகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் வாழும் நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பதுடன், தங்களது கடமைகளையும் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட கண்ணியம் உள்ளது. மனிதர்களுக்கு இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில், பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒற்றுமையும் வேற்றுமையும் அதன் மரபணுவிலேயே இடம்பெற்றுள்ளன.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இயற்கையின் உண்மையான தத்துவம். வரலாற்று ரீதியாகவே அனைத்து மதத்தினருக்கும் புகலிடம் அளித்து, அனைவரும் ஒற்றுமையாக வாழும் பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது என மோகன் பாகவத் தெரிவித்தார்.

<block_P><subboxhd>வேற்றுமையில் ஒற்றுமை!</subboxhd>

மேலும் மோகன் பாகவத் பேசியதாவது:

சுவாமி விவேகானந்தர், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிக்கோளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், அடைய வேண்டிய இலக்கும் உள்ளது என்று கூறியுள்ளார். பாரதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இலக்கு என்னவென்றால், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உண்மையை உணர்வதும், அவ்வப்போது அந்த உண்மையை உலகம் உணரச் செய்வதும்தான்.

நாம் அனைவரும் ஒன்றே. அதே நேரத்தில், அந்த ஒற்றுமைக்கு வேற்றுமை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, வேற்றுமையை கொண்டாடவும், மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அதே சமயம், ஒற்றுமை உணர்வையும் நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு மிகவும் உண்மையானதாகும் என மோகன் பாகவத் கூறினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்